Vijay: `நடிகர் விஜய் நல்லவர்… ஆனால், கொள்கைகளைப் பொறுத்தே முடிவெடுக்க முடியும்!' – கி.வீரமணி

மதுரையில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்தியா கூட்டணி உடைந்தது என்று கூறுவது போலியானது. கூட்டணி உடையவில்லை. கூட்டணி உடைந்ததாக மாய பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

நடிகர் விஜய்

வேற்றுமையில் ஒற்றுமை காட்டுவதே இந்தியா கூட்டணி. பா.ஜ.க-வினர் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர். மோடி தான் வருவார் என்று ஊடகங்கள் மூலமாக பா.ஜ.க-வினர் பரப்பி வருகின்றனர். அதற்கான வாய்ப்பு இல்லை. இப்போதும் மணிப்பூர் செல்ல பிரதமர் மோடி தயாராக இல்லை.

ஒரு மாநிலத்திற்கு மோடி சென்றால் வெற்றி கிடைக்கும் என்று சொல்வதெல்லாம் பொய். தற்போது அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து, வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே மக்கள் கடுங்கோபத்தில் உள்ளார்கள். வாக்களிப்பது மக்கள்தான், தலைவர்கள் அல்ல. மீண்டும் மோடி ஆட்சி வராது. பா.ஜ.க-வுக்கு இதுதான் கடைசி தேர்தல்.

கி.வீரமணி

விஜய் நல்ல நடிகர், தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றி எந்த கருத்தும் கூறமுடியாது. ஆனால், அவர் கட்சியின் கொள்கை என்னவென்று சொன்னால்தான் கருத்து சொல்ல முடியும். கட்சி அனைவரும் ஆரம்பிக்கலாம், முன்மொழியவும் வழிமொழியவும் ஒருவர் இருந்தால் கட்சி ஆரம்பித்துவிடலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

நடிகர் விஜய் கட்சியின் கொள்கைகளை அறிவித்தால்தான், அவரை ஆதரிப்பது குறித்து சொல்ல முடியும். பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போது, பல்லாயிரக்கணக்கான வாக்குகளை இழக்கிறார் என்பதுதான் நிதர்சனம். தமிழக மக்கள் கொதித்துப் போய் உள்ளார்கள். மனித நேயம் இல்லாத பிரதமர் மோடி  ராமேஸ்வரம் போனார். ஆனால் அருகில் வெள்ளத்தால் கடுமையாக பாதித்த மக்களை சந்திக்க இதுவரை போகவில்லை. இதுவரை தமிழகத்தில் புயலால் பாதித்த மக்களை சந்தித்து ஆறுதல்கூட சொல்ல விரும்பாத மோடி எப்படி தமிழகத்தில் வெற்றி பெற முடியும்?

விஜய்

இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்திற்கு எவ்வாறு மோடி செல்ல மறுத்தாரோ அதேபோலதான் தமிழகத்தில் புயலால் பாதித்த மக்களை இதுவரை மோடி பார்க்கவில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.