கர்நாடக மாநிலம், பெங்களூருவில் 43 வயதுடைய நபர் தனது 10 பற்களைச் சேதப்படுத்தியதற்காக, பிரபல பல் மருத்துவமனைமீது சட்ட நடவடிக்கை மேற்கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெங்களூரு, மத்திகெரேயில் உள்ள ஹெச்.எம்.டி லேஅவுட்டில் வசிக்கும் நபர் ஒருவர், அதிகப்படியான பல் பாதிப்பு இருந்தமையால், மல்லேஸ்வரத்திலுள்ள சம்பிகே சாலையில் அமைந்திருக்கும் பிரபல பல் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட அந்நபரின் முன் பற்களுக்குப் பீங்கான் பிரேஸ்களுடன் ஆர்த்தடான்டிக் சிகிச்சை அளித்துள்ளனர். ஓராண்டு சிகிச்சைக்கு அந்த நபர் மொத்தம் 34,000 ரூபாய் செலுத்தியிருக்கிறார்.
இருப்பினும், பல் சிகிச்சையானது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்ததால், கூடுதல் கட்டணமாக ரூ.50,000 செலுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 23.03.2019 அன்று பாதிக்கப்பட்ட அந்நபரின் பிரேஸ்களை (பல் பட்டை) அகற்றும்போது, தன்னுடைய மேல் தாடையில் உள்ள 10 பற்கள் மற்றும் ஈறுகள் சேதமடைந்து உணர்வுதன்மையற்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும், மெல்லும்போது கடுமையான வலி மற்றும் ஈறு வீக்கம், ரத்தக்கசிவு ஏற்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைமீது புகார் அளித்துள்ளார்.
அந்த நபர் மல்லேஸ்வரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் மனு அளித்தும், காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதையடுத்து, அந்த நபர் கர்நாடக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி, இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபரைப் பரிசோதித்த கர்நாடக மாநில பல்மருத்துவ கவுன்சில், இந்த விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. பெங்களூரு கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றம் அந்த அறிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டுமென்று சம்பந்தப்பட்ட பல மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. மேலும், அந்த நபர் சிகிச்சைக்காகச் செலவழித்த 50,000 ரூபாயைத் திருப்பித் தருமாறும் உத்தரவிட்டது.