இ–பைக் டாக்ஸி, எலெக்ட்ரிக் பேட்டரி தயாரிப்பு, எலெக்ட்ரிக் கார், ஸ்போர்ட்ஸ் பைக் என்று கதகளி ஆடிக் கொண்டிருக்கிறது ஓலா. இப்போது கம்யூட்டர்களின் தேவையைப் புரிந்து கொண்டு அடுத்த அஸ்திரத்தை இறக்கிவிட்டிருக்கிறது ஓலா. அந்த அஸ்திரத்தின் பெயர் S1X.
இப்போது ஓலாவின் வலைதளத்தில் ஏற்கெனவே S1 Air, S1 Pro ஸ்கூட்டர்களுக்கு மத்தியில் S1X ஸ்கூட்டரும் சேர்ந்துவிட்டது. மொத்தம் ஓலாவின் இந்த லைன்அப்பில் 6 வகையான ஸ்கூட்டர்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அதாவது S1X-ல் மட்டும் 4 வேரியன்ட்கள். (S1X+, S1X 4kWh, S1X 3kWh, S1X 2kWh).
S1X–யை குறைந்த விலை வாடிக்கையாளர்களுக்காக மட்டும் இரண்டு அடிப்படை வேரியன்ட்களில் விற்பனை செய்கிறது ஓலா. S1X மற்றும் S1X+. S1X–ல் மட்டும் 2kWh மற்றும் 3kWH சக்தி கொண்ட பேட்டரி பேக் ஆப்ஷன் வேரியன்ட்கள் கிடைக்கின்றன. இந்த S1X–ன் அடிப்படை வேரியன்ட் (2kWh) பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இதன் விலை 80,000 ரூபாய் எக்ஸ் ஷோரூம். இதன் டாப் ஸ்பீடு 85 கிமீ; சிங்கிள் சார்ஜுக்கு 95 கிமீ போகும் என்கிறது ஓலா.
இதுவே 3kWh பேட்டரியின் எக்ஸ் ஷோரூம் விலை 90,000 ரூபாய். என்னடா, இது ஏற்கெனவே S1 ப்ரோ வேரியன்ட்டே 120 கிமீ–க்குப் போகுதே; இதுல என்ன ஸ்பெஷல் என்பவர்களுக்கு, மேலும் சில வேரியன்ட்களைக் காட்டுகிறது ஓலா. ஸ்டாண்டர்டான S1X ப்ளஸ் வேரியன்ட் சுமார் 151 கிமீ தூரம் போகும் என்கிறது ஓலா. இதில் S1X 3kWh வேரியன்ட் என்பதன் சிங்கிள் சார்ஜ் ரேஞ்ச், 143 கிமீ. இவை எல்லாமே IDC டிரைவ் சைக்கிள்படி ஓலா க்ளெய்ம் செய்யும் தூரங்கள்.
இன்னொரு ஆப்ஷன் இருக்கிறது. இதுதான் ஹைலைட்டான விஷயம். இதில் எந்த ஸ்கூட்டர்களிலும் இல்லாத 4 kWH பேட்டரி பேக் கொடுத்திருக்கிறார்கள். பெரிய பேட்டரி என்பதால், இதன் ரேஞ்ச் 190 கிமீ என்று IDC (Indian Drive Cycle) படி க்ளெய்ம் செய்கிறது ஓலா. இதன் டாப் ஸ்பீடு 90 கிமீ. இது 0–40 கிமீ தூரத்தை வெறும் 3.3 விநாடிகளில் கடக்கும். இது 3kWH வேரியன்ட்டைவிட 4 கிலோ எடை அதிகம் என்றாலும், இதன் ஹேண்ட்லிங் செம ஈஸியாக இருக்கும். அட, வெறும் 112 கிலோதான் இதன் எடை. நம் வீட்டில் உள்ள சாதாரண 7Amp சார்ஜரில் இதை ஃபுல் சார்ஜ் செய்ய சுமார் 6.30 மணி நேரம் ஆகும். இந்த ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 90 கிமீ. டயர் வழக்கம்போல் ட்யூப்லெஸ்தான் என்பதால் பஞ்சர் கவலை இல்லை. அலாய் வீல்கள் செம ஸ்டைலாக இருக்கின்றன.
வசதிகளைப் பொறுத்தவரை சாஃப்ட்வேர் அப்டேட், டச் ஸ்க்ரீன் என்று பட்டையைக் கிளப்புகிறது S1X. மேலும் சிவப்பு, கறுப்பு என்று கலர் ஆப்ஷன் செம ஸ்போர்ட்டியாக வேறு இருக்கிறது. இந்த விலையை 1.10 லட்ச ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலைக்கு பொசிஷன் செய்திருக்கிறது ஓலா. இதன் டெலிவரிகளை இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறார்களாம்.
வசதிகள், ரேஞ்ச் எல்லாமே செமதான்! சர்வீஸ் பிரச்னைக்கும், அந்த பேட்டரி தீப்பிடிக்காமல் இருப்பதற்கும் வழிவகை செய்யுங்க ஓலா!