பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் இறந்துவிட்டதாகக் கடந்த வாரம் செய்தி வெளியானது. இந்நிலையில், `நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு செய்தேன்’ என அடுத்த நாளே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் பூனம் பாண்டே.

சமூக வலைதளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களால் பின்தொடரப்படும் ஒரு பிரபலம் இவ்வாறு பதிவிடுவது என்பது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் பயத்தை ஏற்படுத்தலாம். அவரது இந்தச் செயலுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சாஹித்யா ரகு.
“இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சிலருக்கு எதிர்மறை புகழைக் கொடுக்கும். உளவியல் ரீதியில் இதை அடுத்தவர்களின் கவனத்தை ஈர்ப்பது (attention seeking) என்றும் கூறலாம். ஒருவேளை தான் இறந்துவிட்டால் மக்கள் எவ்வாறு ரியாக்ட் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகக்கூட இப்படி ஒரு விஷயத்தைச் செய்து இருக்கலாம்.

புற்றுநோயால் இறந்ததாக ஏமாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது `நெகட்டிவ் பிராங்கிங்’ எனப்படும். விளையாட்டாகக்கூட ஒருவரின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது. புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
பூனம் பாண்டே என்ற பிரபலம் இளம் வயதிலேயே இறந்துவிட்டார் என்பதுதான் முதலில் மக்களிடையே போய்ச் சேரும். இது ஒருவித எதிர்மறை உணர்வை, பயத்தை மக்களிடையே ஏற்படுத்தும். ஒரு பிரபலம் உடல்நல பாதிப்பால், அதுவும் புற்றுநோயால் இளம் வயதிலேயே இறந்துவிட்டார் என்ற செய்தி பரவும்போது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்பது, மக்களிடம் இரண்டாவதாகத்தான் போய்ச் சென்றடையும்.

செய்தியைக் கேள்விப்பட்ட உடன் முதலில் அவர் மீது பரிதாபம் வரும். இதை நினைத்து நிறைய ரசிகர்கள் கவலைப் பட்டிருப்பார்கள். சிலருக்கு பயம்கூட ஏற்பட்டிருக்கும். உண்மை தெரிந்த பிறகு இவருடைய ரசிகர்கள், சமூக வலைதளத்தில் பின்தொடர்பவர்கள் மத்தியில் கண்டிப்பாகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொய் சொல்லிவிட்டார் என்று தெரிந்த பிறகு, கோபம் வரும். இந்த விஷயத்தில் பொய் சொல்வதா என்று அனைவரும் விரக்தி தான் அடைந்திருப்பார்கள். அதே போல அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட புற்றுநோயாளிகளுக்கு தங்களுக்கும் இவ்வாறு நேர்ந்துவிடுமோ என்ற பயத்தைக் கொடுத்திருக்கும்.

அவர்களின் நம்பிக்கையை உடைத்து, இன்னும் பயத்தை அதிகப்படுத்தியிருக்கும். இது அவர்களின் உடல்நலத்தையும் பாதிக்கும். கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்திருந்தால் அதைச் செய்ய எத்தனையோ நேர்மறை விஷயங்கள் உள்ளன.
அது மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, விழிப்புணர்வை அடைய வைத்திருக்கும். ஆனால், இந்தச் செயல் பூனம் பாண்டே நினைத்ததுக்கு மாறான தாக்கத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கும். இந்த வழியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது முற்றிலும் தவறான ஒன்று.

இவர் ஒரு பிரபலம் என்பதால் இதே பாதையை வேறு மக்களும் பின்பற்றவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. தனிமனிதனோ, பிரபலமோ யாராக இருந்தாலும் சமூகத்தில் பொறுப்பானவராக நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.