மெஹ்சானா : குஜராத்தில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு இயக்கப்பட்ட, ‘ஆஸ்தா’ சிறப்பு ரயிலை பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தனர்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் எழுப்பப்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு குழந்தை வடிவ ராமர் சிலை நிறுவப்பட்டது.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, கடந்த 22 முதல் நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு ஆஸ்தா சிறப்பு ரயில்களை மத்திய ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
அந்த வகையில், குஜராத்தின் மெஹ்சானா நகரில் இருந்து நேற்று புறப்பட்ட ஆஸ்தா சிறப்பு ரயிலை மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் முகேஷ் படேல் மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நேற்று துவக்கி வைத்தனர்.
முகேஷ் படேல் கூறுகையில், “மெஹ்சானா லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஏழு சட்டசபை தொகுதிகளில் இருந்து 1,344 பக்தர்கள் இந்த சிறப்பு ரயிலில் அயோத்திக்கு சென்றனர்.
ராமர் கோவிலில் அவர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பிற லோக்சபா தொகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement