சுயாதீன இசைக் கலைஞர்களுக்கான வரவேற்பு தற்போது அதிகரித்திருக்கிறது.
யூட்யூபில் சுயாதீன இசைக் கலைஞர்களாக பயணத்தை தொடங்கியவர்கள் பலர் தற்போது இசை துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது மக்களிடையே அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகிறது ‘கட்சி சேர’ பாடல். இந்த பாடலை இசையமைத்துப் பாடிய சாய் அபயங்கர், நடனமாடிய சம்யுக்தா, இப்பாடலை எழுதிய ஆதேஷ் கிருஷ்ணா ஆகியோரைச் சந்தித்துப் பேசினோம்.

இப்பாடலை இசையமைத்து பாடிய சாய் அபயங்கர் பேசுகையில், “இப்போ நீங்க கேட்குற ரிதம் மூலமாகதான் இந்த பாடலுக்கான வேலைகள் தொடங்குச்சு. அதுல சில விஷயங்களை சேர்க்கலாம்னு ஐடியாஸ் வச்சிருந்தோம். ரைமிங்கான பாடல் வரிகளை பாடலாசிரியர் எழுதி கொடுத்தார். இப்படிதான் இந்த ‘கட்சி சேர’ பாடல் உருவாகுச்சு. நான் பாடல் ஷூட்டிங்கிற்கு ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் நடனத்திற்கு பயிற்சி எடுத்துக்க போனேன்.
இப்பாடியான பாடலுக்கு நேரெதிரான நடனத்தை அமைக்கணும்னு திட்டமிட்டோம். நாங்க திட்டமிட்ட மாதிரிதான் ஷுட் பண்ணினோம்.” என்று கூறினார். இவர் பாடகர்கள் திப்பு – ஹரினி ஆகியோரின் மகன் ஆவார். தனது இசை பயணம் குறித்த கேள்விக்கு, “நான் செய்ய நினைத்த விஷயங்கள்ல என்னுடைய பெற்றோர்கள் முக்கியமான பங்கு வகிச்சாங்க
சின்ன வயசுல பியானோ கத்துக்கும் போது எனக்கு பெருசா ஆர்வம் வரல. அதுக்குப் பிறகு 8 வது படிக்கும் போது முழு ஆண்டு தேர்வு விடுமுறைல அப்பாவோட ஸ்டுடியோவுல போய் யூட்யூப் பார்த்து ஆர்வத்தோட சில விஷயங்கள் கத்துகிட்டேன். சரியான வாய்ப்பு கிடைக்கிற வரைக்கும் முயற்சி பண்ணிட்டே இருப்போம்னு திட்டமிட்டேன். என்னோட பெற்றோர்களும் என்னை வழிநடத்துனாங்க. என்னோட குரு ஹென்ரி குருவிலா சார் கிட்ட நிறைய விஷயங்கள் இசை தொடர்பாக கத்துகிட்டேன். இவர் ரஹ்மான் சார்கிட்ட வின்னைத்தாண்டி வருவாயா, கடல், மரியான் படங்கள்ல வேலைப் பார்த்திருக்கார். ஶ்ரீராம் பார்த்தசாரதி சார்கிட்ட பாடுறதுக்கு கத்துகிட்டேன்.
முதல்ல ரஹ்மான் சாருக்கு நன்றி. அவர் இந்த பாடலை கேட்டார். அவருக்கு பிடிச்சிருந்தது. அதுக்குப் பிறகு இந்த பாடலை ஷேர் பண்ணார். அனிருத் சாரும் இந்த பாட்டை கேட்டார். அவருக்கும் இந்த பாடல் பிடிச்சு ஷேர் பண்ணார். அவர் இந்த பாடலோட ப்ரோடக்ஷன் பணிகளை ஆழமாக கவனிச்சு பாராட்டினார். சந்தோஷ் நாராயணன் சாருக்கும் பாடல் ரொம்ப பிடிச்சிருந்தது. அவர் அங்கிருந்தவங்களுக்கு பாட்டு நல்லா இருக்குனு போட்டுக் காமிச்சாரு. ஜி.வி.பிரகாஷ் சாரும் பாராட்டினார். தனுஷ் சாரும் பாட்டை கேட்டார். யூட்யூப்ல பலர் சொன்ன கமென்ட்ஸ்தான் அவரும் சொன்னார். ப்ரோகிராமிங் நல்லா இருக்கு. குரல் நல்லா இருக்கு. செம்ம கேட்சியாக இருக்கு. கண்டிப்பாக ஹிட்டாகும்னு சொல்லி தனுஷ் சார் பாராட்டினார்” என்று பேசினார்.
இப்பாடலில் நடனமாடி அசத்தியிருந்த சம்யுக்தா பேசுகையில், “இந்தப் பாடலுக்கு இப்படியான வரவேற்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. இந்த பாடல் பத்தி முதல்ல சாய் என்கிட்ட சொன்னார். அவர் இந்த பாட்டையும் போட்டுக் காட்டினார். இந்த பாட்டை முதன்முறையாக கேட்கும்போதே இது கண்டிப்பாக ஹிட்டாகும்னு நினைச்சேன். இந்த பாடலுக்கேத்த மாதிரியான நடனமாகவே இருக்காது. ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். எனக்கு இந்த மாதிரி புதுமையான விஷயங்கள் பண்றதுக்கு ரொம்ப பிடிக்கும். டான்சர்ஸ் கிளப்பைச் சேர்ந்த அனு கோரியோகிராபி பண்ணினாங்க. அவங்களும் அருமையான வேலையை பண்ணினாங்க.
இந்த பாடல்ல வர்ற ஸ்டெப்ஸ்லாம் காட்டும்போது பயமாக இருந்தது. அவங்க அதை உடைச்சு எனக்கு பயிற்சி கொடுத்தாங்க. சின்ன வயசுல இருந்தே அதிகமான படங்கள் பார்ப்பேன். சினிமாவை ரொம்ப பிடிக்கும். இந்த துறைக்கு வர்றதுக்கு பெற்றோர்களை ஒத்துக்க வச்சு அதுக்கு பிறகு விஸ்காம் படிச்சேன். அப்போ விளம்பரம், குறும்படங்கள்ல நடிச்சிட்டு இருந்தேன். அதுக்குப் பிறகு அமெரிக்காவுல மாஸ்டர்ஸ் படிச்சிட்டு வந்ததும் கொரோனா காலகட்டம் தொடங்கிடுச்சு. அப்புறம் விளம்பரம், குறும்படம், மியூசிக் வீடியோஸ்னு பண்ணிட்டிருக்கேன்.” என முடித்துக் கொண்டார்.
இப்பாடலின் பாடலாசிரியர் ஆதேஷ் கிருஷ்ணா, “இந்த பாடலோட டிராக்கை எனக்கு போட்டுக் காமிச்சாங்க. காதலர்கள் சேரும் போது வர்ற பாடல்தான் ‘கட்சி சேர’. அப்படியான தன்மைலதான் இந்த பாடலை எழுதுனேன்” என்று கூறினார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஓம்.பிரகாஷின் மகன். தன்னுடைய சினிமா ஆர்வம் குறித்து பேசுகையில், “நான் சின்ன வயசா இருக்கும்போது பாலசந்தர் சார், கமல் சாரோட படங்கள் எங்க வீட்டுல போட்டுக் காட்டுவாங்க. அது மூலமாகதான் ஆர்வம் வந்து சினிமாவோட பயணம் ஆரம்பமாச்சு. எனக்கு திரைக்கதை எழுதுறதுலதான் ரொம்ப ஆர்வம் இருக்கு. அதோட வெளிபாடுதான் இந்த பாடல் மூலமாக வெளிப்பட்டிருக்குனு சொல்லலாம். திருச்சிற்றம்பலம், D-50 படங்கள்ல துணை ஒளிப்பதிவாளராக வேலைப் பார்த்திருக்கேன்” என்று பேசி முடித்தார்.
முழுப் பேட்டியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.