அயோத்தியில் கடந்த ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் அயோத்தி ராமர் கோயிலில், பிராண பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள், `மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மத விழாவை அரசு விழாபோல அரசியல் ஆதாயத்துக்காக பா.ஜ.க அரசு நடத்துகிறது’ எனக் கூறி, புறக்கணித்துவிட்டன. அடுத்த ஒருவாரத்தில், நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய நாள், புதிய நாடாளுமன்றத்துக்குள் முதன்முறையாக காலடி எடுத்துவைத்த குடியரசுத் தலைவர், மத்திய அரசு தயார்செய்து கொடுத்த உரையை வாசித்தார். அதில், பா.ஜ.க ஆட்சியில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசு குறிப்பிட்டதையும் வாசித்தார். அவர் மட்டுமல்லாது, இரு அவைகளிலும் நடந்து கொண்டிருக்கும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், கேள்வி பதில் விவாதத்தில் அமைச்சர்களும், பா.ஜ.க எம்.பி-க்களும் ராமர் கோயிலைக் குறிப்பிடாமல் பேசமாலில்லை.
இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் எம்.பி ஜான் பிரிட்டாஸ், ராஜ்ய சபாவில் அயோத்தி ராமர் கோயில் விவகாரத்திலும், மசூதி விவகாரத்திலும் பா.ஜ.க-வை கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.
நேற்று முன்தினம் ராஜ்ய சபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய ஜான் ஜான் பிரிட்டாஸ், “பட்ஜெட் கூட்டத்தொடர் அமர்வுகளில் அயோத்தி ராமர் கோயில் மற்றும் பிரதமர் மோடி பற்றி இல்லாமல், எந்த உரையும் முடிவடைவதில்லை. உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின்பேரில் ராமர் கோயில் கட்டப்பட்டு பிராண பிரதிஷ்டை நடந்திருப்பதாக அவர்கள் (பா.ஜ.க) கூறுகிறார்கள். அவர்கள் என்ன அம்னீசியாவால் (மறதி நோய்) பாதிக்கப்பட்டிருக்கிறார்களா…

இதே உச்ச நீதிமன்றம்தான் பாபர் மசூதி வழக்கில், `இது சட்டத்தின் தீவிர விதிமீறல்’ என்று கூறியிருக்கிறது. அவர்கள் எல்லோருமே இதை மறந்துவிட்டார்கள். மேலும், அவர்கள் எல்லோரும் ராமரைப் பற்றி பேசுகிறார்கள். ராமர் எங்களுக்குமானவர்தான். ஆனால், எங்களின் ராமர் மகாத்மா காந்தியின் ராமர் (இரக்கம், நல்லிணக்கம், அன்பு). அவர்களும் (பா.ஜ.க) ராமரைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் ராம் `நாதுராம்’. உங்களால் ராமரை ஏமாற்ற முடியாது. ராமரைப் பற்றி எவ்வளவு பேசினாலும், அதில் அரசியல் ஆதாயம் பெறுவதே உங்களின் நோக்கம்.
பிப்ரவரி 4 முக்கியமான நாள், அன்றுதான் சர்தார் படேல் ஆர்.எஸ்.எஸ்-ஸை தடைசெய்தார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் செங்கோலுக்கு பின்னின்று வருகிறார் இதுதான் ஜனநாயக நாடா… நாட்டில் குடிமக்களுக்கு பிராண பிரதிஷ்டை (உயிர்கொடுத்தல்) செய்வதுதான் பிரதமரின் முதற் கடமை, கடவுள்களுக்கு அல்ல. அவர், மணிப்பூருக்குச் சென்று அங்கிருக்கும் மக்களுக்குப் பிராண பிரதிஷ்டை செய்யவேண்டும். அதைத்தான் முதலில் செய்துமுடிக்க வேண்டும். அதற்குப் பதில் அரசியல் நாடகத்தை நடத்தாதீர்கள்…

எவ்வாறு நீங்கள் தோண்டுகிறீர்களோ அதை இன்னும் ஆழமாகத் தோண்டுங்கள், அதில் புத்த விகாரங்களை, சமண விகாரங்களையும் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்… இன்னும் ஆழமாகத் தோண்டினால் மத்திய கிழக்குக்குச் செல்லலாம்… இன்னும் தோண்டினால் ஆப்பிரிக்காவுக்குச் செல்லலாம்… அங்கிருந்துதான் நம் முன்னோர்கள் வந்தார்கள்… அப்படியிருக்க இப்போது தோண்டுவதன் நோக்கம் என்ன… இன்றைக்கு மீடியா (Media)-க்கள் மோடியா (Modia)-க்களாக மாற்றப்பட்டிருக்கிறது” எனக் கடுமையாகச் சாடினார்.
டெல்லியில், டாக்டர் சுபாஷ் சி காஷ்யப், பிரபுல் படேல் உள்ளிட்ட பிரபலங்களின் நடுவர் மன்றத்தால் லோக்மத் நாடாளுமன்ற விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, ஜான் பிரிட்டாஸுக்கு 2023-ன் சிறந்த நாடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் என்ற விருதை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.