`ஊழியர்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்கப் பணம் கொடுத்தாரா மேயர்?' – பரபரக்கும் கரூர் மாநகராட்சி

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் சக ஊழியர் ராஜசேகரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாநகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊழியர்களை ஆணையர் ஒருமையில் பேசியதாகவும், மேயர் கவிதா கணேசன் ஊழியர்கள் போராட்டத்தை தடுக்க பணம் கொடுத்ததாகவும் கிளம்பிய தகவல், கரூர் மாநகராட்சி வட்டாரத்தை லைம்லைட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.

கரூர் மாநகராட்சியில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் கரூர் மாநகராட்சி ஆணையராக சுதா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இங்கு பணியில் சேர்ந்த பிறகு, மேற்படி தொகுப்பூதிய பணியாளர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாக அவ்வபோது குற்றச்சாட்டுகள் எழுந்தது. பணி நேரத்தில் தங்களை தரக்குறைவாக பேசுவதாகவும், வேலை நேரத்தைவிட கூடுதலான நேரம் பணியாற்ற வற்புறுத்துவதாகவும் பணியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தொகுப்பூதிய பணியாளரான ராஜசேகர் என்பவரை ஆணையர் சுதா திடீரென பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு, கார வகைகளுக்கான பில்கள் தயாரித்ததில் பிழைகள் இருப்பதாக குற்றம்சாட்டி, ராஜசேகர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இடைநீக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஊழியர்களுடம் பேச்சுவார்த்தை நடத்தும் மேயர்

இதனால், கோபமான 30-க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள், ராஜசேகரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும், தங்களை ஒருமையில் ஆணையர் பேசுவதாகவும் கூறி, மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரும், வருவாய்த்துறை ஊழியர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாநகராட்சி ஆணையாளர் சுதா மற்றும் மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தின்போது, ‘கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா, வருவாய்த்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட வரி தொகையினை வசூல் செய்து கொடுக்க வேண்டும்’ என டார்கெட் வைத்து அதிக வேலை வாங்குவதோடு, தங்களை ஒருமையிலும் அவர் பேசுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தாங்கள் போராட்டம் நடத்தும் இப்போதும்கூட, தங்களிடம் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தாமல், மிரட்டும் தொனியில் ஆணையர் தங்களிடம் பேசியதாக ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்போது, மேயர் கவிதா கணேசன், போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த ஊழியர் ஒருவருக்குப் பணம் கொடுக்க, ‘போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட பணம் கொடுக்கிறார் மேயர்’ என்று பரபர தகவல் பரவியது. இந்நிலையில், தொடர் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஊழியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில், கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையாளர் சுதா,

“ஊழியர்கள் பணிக்குச் செல்லாமல், போராட்டத்தில் ஈடுபட்ட போது, உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். கரூர் மாநகராட்சியில் இரண்டு வகையான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் களப்பணியாளர்கள் வரி வசூல், குடிநீர் விநியோகம், சுகாதார களப்பணியாளர்கள், வரி வசூல் மேற்கொள்ளும் வருவாய்த்துறை பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் ஏற்கெனவே அரசு நிர்ணயித்த பணி நேரத்தில் பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சி அலுவலகத்துக்குள் பணியாற்றி வரும் ஊழியர்கள் அலுவலகத்தில் உள்ள இருக்கை பணி மேற்கொள்ள குறித்த நேரத்தில் அலுவலகம் வந்து பணிகளை முடித்து, மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இரு பிரிவு பணியாளர்களை எனது குடும்பத்தில் ஒருவராக, நினைத்து அனைவரது பணிச்சுமையையும், மாநகராட்சியின் நிதி சுமையையும் குறைக்கும் வகையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை, மாநகராட்சி ஆணையர் என்ற அடிப்படையில் வழங்கி வந்தேன்.

பேட்டியளிக்கும் சுதா (மாநகராட்சி ஆணையர்)

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வருவாய்த்துறை வரி வசூல் நிலுவைத் தொகை குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வரி வசூல் மிக குறைவாக உள்ளது குறித்து சுட்டிக்காட்டி, மாநகராட்சி நிர்வாகம் பொது மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர நிதி அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு அனைத்து கள வருவாய்த்துறை பணியாளர்களும், வரி நிலுவை வைத்துள்ள பொது மக்களைச் சந்தித்து வரி செலுத்தும் மையங்களில் வரி செலுத்த அறிவுறுத்த வேண்டும் என, வழிகாட்டுதல்கள் ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்டது. இதனால், வருவாய்த்துறை ஊழியர்களுக்கு எந்த கூடுதல் பணியும் வழங்கப்படவில்லை.

அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில், யாரையும் ஒருமையில் நான் பேசவில்லை. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி வருவாய்த்துறை பணியாளர், மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியதன் அடிப்படையில், மேல் நடவடிக்கைக்காக துறைரீதியாக அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளில் வரி குறைவாக வசூல் செய்யும் மாநகராட்சியில் கரூர் மாநகராட்சி 15-வது இடத்தில் உள்ளது. கரூர் மாநகராட்சியில் மாதம் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் அளவுக்கு செலவினங்கள் உள்ளது. ஆனால், கடந்த மாதம் மொத்தம் 2 கோடி ரூபாய்கூட வரி வசூல் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மாநகராட்சியில் பணியாற்றும் 100 பணியாளர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வருவாய்த்துறை பணியாளர்களின் சுமை குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டொன்றுக்கு எண்பது கோடி அளவுக்கு வரி வசூல் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், வெறும் ரூ.20 கோடி மட்டுமே வரி வசூல் மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி வருவாய்த்துறை அலுவலர்கள் நிலுவை வரி தொகையை வசூல் செய்வது, வரி விதிப்பு செய்யப்படாமல் உள்ள கட்டடங்களை கணக்கீடு செய்து வரி விதிப்பது ஆகிய வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த பத்து மாதங்களாக சரியாக வரி வசூல் வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்படவில்லை.

கரூர் மாநகராட்சி

மாநகராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில், வருவாய்த்துறை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது வருத்தம் அளிக்கிறது. அனைத்து வகை பணியாளர்களுக்கும் அரசு நிர்ணயித்துள்ள விடுப்பு முறையாக வழங்கப்பட்டு வருகிறது. யாரையும் கட்டாயப்படுத்தி விடுமுறை வழங்காமல், இல்லை. கரூர் மாநகராட்சிக்கு நிலுவையில் உள்ள வரி தொகை ரூபாய் 37.5 கோடி. நடப்பு ஆண்டில் மாநகராட்சிக்கு வசூலிக்க வேண்டிய வரி தொகை ரூபாய் 21.5 கோடி. மொத்தமாக 59 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை உள்ளது. கடந்த பத்து மாதங்களில் கரூர் மாநகராட்சியில் வசூலிக்கப்பட்ட வரி தொகை ரூ.8.57 கோடி ரூபாய் மட்டுமே. மாதம் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு செலவு உள்ள நிலையில், வரி வசூல் தொகை நிலுவையாக உள்ளதால் பொதுமக்களுக்கு வடிகால் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள, நிதி இல்லாத சூழல் ஏற்படும் என்பதாலேயே… வரி வசூல் நிலுவைத் தொகையை விரைந்து முடிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மாநகராட்சி மேயர் பணம் கொடுத்ததாகச் சொல்ல்லப்பட்ட விவகாரத்தில், மேயர் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இது குறித்து, மேயர் கவிதா கணேசன் தரப்பில் பேசியவர்கள், “திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக தமிழக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு, கரூர் மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் வழங்கப்பட்டது. இது தவிர, மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேலும் கூடுதலாக ஒரு நாள் சம்பளத்தை வழங்க ஊழியர்களைக் கட்டாயப்படுத்தியதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக வருவாய்த்துறை கள ஊழியர் செந்தில் என்பவர் இப்படிக் கூறிக் கொண்டிருந்தார்.

ஊழியர்களுடம் பேச்சுவார்த்தை நடத்தும் மேயர்

அதையடுத்து, `மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் யாரையும் கட்டாயப்படுத்தி கூடுதல் வெள்ள நிவாரண உதவி தொகையாக ஒருநாள் சம்பளம் பெறப்படவில்லை’ என மேயர் விளக்கம் அளித்தார். ஆனால், ஊழியர் செந்தில் தன்னை மாநகராட்சியில் பணியாற்றும் மேலதிகாரி கட்டாயப்படுத்தி ஒரு நாள் ஊதியத்தை வழங்க வற்புறுத்தினார் எனத் தெரிவித்தார். இதனையடுத்து மேயர் கவிதா, `ஒரு நாள் ஊதியத் தொகையை நான் வழங்குகிறேன். இது குறித்து நான் விசாரிக்கிறேன்’ எனத் தெரிவித்தார். ஆனால், அதை அவர் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.