புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர்கள் நேரு மற்றும் இந்திரா காந்தி குறித்து விமர்சித்தும், காங்கிரஸ் கட்சியை தரம் தாழ்த்தியும் பேசியுள்ளார். நாலாம்தர அரசியல்வாதியைப்போல பிரதமர் பேசியது வருத்தமளிக்கிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் கேட்பதைவிட அதிகமாக நிதி வழங்குகிறார்கள்.

ஆனால் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை பிரதமரும், உள்துறை அமைச்சரும் பழிவாங்குகின்றனர். இதனால் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்கள் மத்திய அரசை எதிர்த்து தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதுவை கவர்னர் தமிழிசை அவர்கள், மத்திய உள்துறை அமைச்சரை மாநில திட்டங்களுக்காகத்தான் சந்தித்தேன் என்றும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். புதுவைக்கு இதுவரை கவர்னர் எந்த திட்டங்களை கொண்டு வந்தார்?
கவர்னர் மாளிகை மத்திய பா.ஜ.க கட்சியின் தலைமை அலுவலகமாக செயல்படுகிறது. கவர்னர் தமிழிசை சுயவிளம்பரம் தேடி முதலமைச்சரை டம்மியாக்கி, மக்களிடம் செல்வாக்கை பெற்று, தேர்தலில் நிற்கும் வேலையை இரண்டு ஆண்டுகளாக செய்து வந்தார். இப்போது புதுவையில் போட்டியிட அனைத்து வேலைகளையும் மும்முரமாக செய்து வருகிறார். ஆனால் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க-வும் தமிழிசையை வேட்பாளராக நிறுத்த எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பதவியில் இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிட அவர் முயற்சித்து வருகிறார்.

கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழிசை தேர்தலில் நிற்க வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமி தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. 2011 முதல் 2024 வரை மாநில அந்தஸ்து பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நியமன எம்.எல்.ஏ-க்களையும், ராஜ்ய சபா மற்றும் லோக் சபா எம்.பி-யையும் பா.ஜ.க-வுக்கு விட்டுக்கொடுத்து, பிரதமருடன் இணக்கமாக இருக்கும் ரங்கசாமி, ஏன் புதுவைக்கு மாநில அந்தஸ்தை பெற்றுத் தரவில்லை?
புதுவையில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. ஊழல் செய்து லேப்டாப் வாங்கியுள்ளனர். இதை நிரூபிப்போம். முதலமைச்சரும், அமைச்சர்களும் ஊழலில் ஈடுபடுகின்றனர். பொதுப்பணித்துறையில் 30 சதவிகித கமிஷன், கலால் துறையில் பார் அனுமதிக்கு ரூ.40 லட்சம், முட்டை வாங்குவதில் ஊழல்செய்கின்றனர். இந்த ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டனர். நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. ரேஷன் கடைகளை திறக்கவில்லை. எதையும் செய்யாமல், சாதனை செய்துவிட்டதாக முதலமைச்சர் ரங்கசாமி கூறி வருகிறார்.

சிலிண்டர் மானியம் 10 சதவிகிதத்தினருக்குக்கூட வழங்கவில்லை. பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வைப்புத்தொகை வழங்கவில்லை. பெண்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கவில்லை. ரங்கசாமியின் சாதனைகள் அனைத்தும் வேதனைகள்தான். ரங்கசாமி பொய்களைக் கூறி ஆட்சி செய்து வருகிறார். வில்லியனூரில் கஞ்சா தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பு அதிகரித்துள்ளது.
பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துகள் போலி பத்திரம் மூலம் அபகரிக்கப்படுகிறது. ரவுடிகள் சிறையிலிருந்து வியாபாரிகளை மிரட்டி பணம் கேட்கின்றனர். வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை புதுவையில் உருவாகியுள்ளது. அதை முக்கிய அம்சமாக வைத்து தேர்தலை சந்திப்போம். வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணிக்கு சாவு மணி அடிக்கும். புதுவை மக்கள் ஆட்சியாளர்கள் மீது கோபமாக உள்ளனர். இந்த ஆட்சியை தூக்கியெறிய வேண்டும் என மக்கள் எண்ணுகின்றனர்.
இந்தியா கூட்டணி வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார். நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க-வின் ஊழலை ஆதாரத்தோடு வெளிப்படுத்துவோம். இந்தியா கூட்டணியில் பேசி சுமுகமாக தொகுதி பங்கீடு செய்வோம். ரங்கசாமிக்கு தேர்தலில் நிற்பதற்கு முதுகெலும்பு இல்லை. அதனால்தான் பா.ஜ.க தோற்கட்டும் என்று நினைத்தே தொகுதியை தாரை வார்த்துவிட்டார். புதுவையில் பா.ஜ.க எங்கு உள்ளது? நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி” என்றார்.