ஐ.பி.எல் போட்டிகளுக்கென வெறித்தனமான ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ரசிகர் கூட்டத்திற்கு வரவிருக்கும் ஐ.பி.எல் சீசன் இந்தியாவில் நடக்குமா அல்லது வெளிநாட்டில் நடக்குமா என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
காரணம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல். நாடாளுமன்றத் தேர்தலையும் ஐ.பி.எல் ஐயும் ஒரே நேரத்தில் நடத்த முடியுமா என்கிற சந்தேகம் இருப்பதால் ஐ.பி.எல் போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றப்படலாம் என்கிற செய்தியும் இருக்கிறது.

ஆனால், இதில் உண்மை என்ன? இது சம்பந்தமாக மோடியே முன்பொரு நாள் பேசியிருக்கிறார். அவர் பேசியது என்ன?
ஐ.பி.எல் தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஐ.பி.எல் இன் வருகைக்குப் பிறகு இந்தியா மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களை சந்தித்திருக்கிறது. UPA கூட்டணி ஆட்சியில் இருந்த போது நடந்த 2009 தேர்தலின் போது ஐ.பி.எல் போட்டிகளையும் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தினால் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதைக் காரணம் காட்டி ஐ.பி.எல் போட்டிகளை முழுமையாக தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றினார்கள்.

2009 சீசன் முழுவதும் தென்னாப்பிரிக்காவிலேயே நடந்திருந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது அந்த சீசனின் முதல் பாதி போட்டிகள் துபாயில் நடத்தப்பட்டிருந்தன.
ஏப்ரல் 7 முதல் மே 12 வரை 9 கட்டங்களாக அந்த தேர்தல் நடந்திருந்தது. ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடந்த 20 போட்டிகள் துபாயில் நடந்தன. எஞ்சியிருந்த போட்டிகள் இந்தியாவில் நடந்தன.
2019 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியில் தேர்தலின் போதுகூட ஐ.பி.எல் ஐ வெளிநாட்டிற்கு அனுப்பிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். பாதுகாப்பு வழங்கமுடியாமல் வெளிநாட்டுக்கு போட்டிகள் சென்றால் அது தங்கள் அரசாங்கம் மற்றும் மோடி இமேஜின் மீது விழுந்த அடியாக இருக்கும் என நினைத்தனர். 2019 தேர்தல் ஏப்ரல் 11 தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடந்திருந்தது. தேர்தல் நடந்த அதே சமயத்தில் மார்ச் 23 முதல் மே 12 வரை ஐ.பி.எல் போட்டிகளும் இந்தியாவிலேயே நடத்தப்பட்டிருந்தது. ராஜஸ்தானில் ஒரு தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போது மோடியே ஐ.பி.எல் ஐ வைத்து காங்கிரஸை விமர்சித்து அரசியல் செய்திருந்தார். அந்தக் கூட்டத்தில்,

‘இந்திய இளைஞர்களுக்கு ஐ.பி.எல் போட்டிகளின் மீது அதிக ஆர்வம் இருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் இரண்டு முறை ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் ஆட முடியாமல் போயிருக்கிறது. அந்த சமயத்தில் இருந்த அரசு பயங்கரவாதிகளை கண்டு அஞ்சியது. அவர்களுக்கு தைரியமே இல்லை. தேர்தல் நடப்பதால் ஐ.பி.எல் போட்டிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்றார்கள். தேர்தல் இப்போதும்தான் நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நவராத்திரி, ராமநவமி, அனுமன் ஜெயந்தி என கொண்டாட்டங்களும் நடந்து கொண்டிருக்கிறது. ஐ.பி.எல் லும் நடந்துகொண்டிருக்கிறது.’
என மோடி ஐ.பி.எல் ஐயும் தனது தேர்தல் அஸ்திரமாகப் பயன்படுத்தியிருந்தார்.
அதே அரசாங்கம். அதே மோடி. இப்போது போய் ஐ.பி.எல் ஐ போய் வெளிநாட்டில் நடத்தினால் அது தாங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் இமேஜிற்கு பலத்த அடியாக அமையும் என்பதால் அரசாங்கம் அதற்கு ஒத்துக்கொள்ளவே செய்யாது. அரசாங்கத்தை மீறி பிசிசிஐயும் ஒன்றும் செய்யாது. மேலும், ஐ.பி.எல் ஐ வெளிநாட்டில் நடத்துவதற்கு ஏதேனும் திட்டம் இருந்திருந்தால் இதற்குள் துபாயை டிக் அடித்து பிசிசிஐ வேலைகளில் இறங்கியிருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும், சேப்பாக்கம் போன்ற ஐ.பி.எல் போட்டிகளை நடத்தும் மைதானங்கள் ஐ.பி.எல் க்காக மைதானத்தை புனரமைக்கும் வேலையில் இறங்கிவிட்டனர். பிசிசிஐயிடமிருந்து மெசேஜ் கிடைக்காமல் வேலைகளில் இறங்கியிருக்கமாட்டார்கள். ஆக, வரவிருக்கும் ஐ.பி.எல் தொடர் 99.9 சதவீதம் இந்தியாவில்தான் நடைபெறும்.
இந்த ஐ.பி.எல் போட்டிகள் எங்கு நடைபெறும் என நீங்கள் நினைக்கிறீர்கள் கமென்ட்டில் பதிவிடுங்கள்!