சென்னை தி.நகரில் `சினேகாலயா சில்க்ஸ்’ என்ற பட்டுப் புடவை கடையைத் திறக்கிறார் சினேகா. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்ததுடன், விதவிதமான பட்டுப்புடவைகளையும் பதிவிட்டு வருகிறார். இப்போது விஜய்யின் `தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வரும் சினேகாவில் `சினேகாலயா சில்க்ஸ் ‘பற்றி அவரது கணவர் பிரசன்னாவிடம் பேசினேன்.

“கடந்த சில வருஷங்களாகவே மனசுல இருந்த ஒரு ஐடியாவைதான் இப்ப செயல்படுத்தியிருக்கோம். சினேகா நடித்த படங்கள்ல எல்லாமே ஹோம்லி கேர்ள் ஆகத்தான் நடிச்சிருப்பாங்க. படங்கள்ல அவங்க கட்டியிருக்கும் சேலைகள் ரொம்ப பிரபலமாகிடும். துணிக்கடைக்குப் போனால் கூட, ‘சினேகா மேம் கட்டியிருக்கற புடவை மாதிரி எடுங்க’ன்னு கேட்டு வாங்குவாங்க. அதிலும் பச்சைக் கலர் இன்னும் பிரபலம். ‘சினேகா க்ரீன்’னு சொல்லியே கேட்பாங்க.
நாங்களும் வெளியே எங்காவது போனால் கூட அவங்ககிட்ட ‘உங்க புடவை நல்லா இருக்கே? எங்கே வாங்குனீங்க?’னு கேட்டுப்பாங்க. இதை எல்லாம் பார்க்கும் போதுதான், இப்படி ஒரு ஐடியாவே எங்களுக்கு தோணுச்சு. ஐடியா வந்ததும் உடனே செயல்படுத்திடல. ரெண்டு வருஷமாகவே இது விஷயமா நிறைய ரிசர்ச் பண்ணினோம். தமிழகம் மட்டுமல்லாமல், பட்டுக்கு எங்கெல்லாம் ஃபேமஸோ அங்கே எல்லாம் விசிட் அடிச்சோம். காஞ்சிபுரம், ஆரணி, பனாரஸ், சின்னாளம்பட்டுனு பட்டுப்புடவைகள் எங்கெல்லாம் சிறப்போ, அந்த இடங்களுக்கு போயிட்டு, அங்குள்ல நெசவுகள்ல எப்படி நெய்யுறாங்க, அந்த தறியில் என்ன சிறப்பு… எனப் பல நெசவாளர்களிடம் பேசினோம். அவர்கள் சொன்ன விஷயங்கள் அத்தனையும் பிரமிக்க வெச்சிடுச்சு. அதன்பிறகே கடை திறக்கலாம்னு திட்டமிட்டோம்.

சென்னை தி.நகர்ல வெங்கட்நாராயணா ரோட்டுல உள்ள நடேசன் பூங்காவிற்கு அருகில்தான் ‘சினேகாலயா சில்க்ஸ்’ கடை அமைந்திருக்கிறது. வர்ற 11, 12 தேதிகள்ல கடை திறப்பு நடைபெறுகிறது. 11ம் தேதி திறப்பு விழாவிற்கு எங்களது திரையுலக நண்பர்களுக்கும், நெருங்கிய நட்புகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். 12ம் தேதி பொதுமக்களுக்கு திறக்கப்படுகிறது. உங்கள் ஆசிகளோடு ஒரு நல்ல விஷயத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்” என்றார் நெகிழ்ச்சியுடன்.