`அடுத்த 25 ஆண்டுகள் நாட்டுக்கு மிக முக்கியமானவை!' – 17-வது மக்களவையில் பிரதமர் மோடியின் கடைசி உரை

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இன்னும் மூன்று மாதங்களில் முடிவடையவிருக்கும் நிலையில், 17-வது மக்களவையின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடராக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒருவாரமாக நடைபெற்றுவந்தது. இதில், பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் இந்தாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மக்களவை

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ராமர் கோயில்மீதான தீர்மானத்தோடு இன்று முடிவுக்கு வந்தது. இந்த தீர்மானத்தின்மீது உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஜனவரி 22 (ராமர் கோயில் திறப்பு விழா) மாபெரும் இந்தியாவின் தொடக்கம்” என்று கூற, “ஜனவரி 22-ன் மூலம் ஒரு மதம் இன்னொரு மதத்தை வென்றுவிட்டது என்ற செய்தியைத்தான் இந்த அரசு கூற விரும்புகிறதா?” என ஒவைசி கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், அடுத்துவரும் 25 ஆண்டுகள் நாட்டுக்கு மிக முக்கியமானவை என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். 17-வது மக்களவையில் இன்று தன்னுடைய கடைசி உரையை நிகழ்த்திய பிரதமர் மோடி, “இந்த ஐந்து வருடங்களும் (2019 – 2024) நாட்டின் சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றங்கள் பற்றியது. சீர்திருத்தமும், செயல்பாடும் ஒரே நேரத்தில் நடப்பது மிகவும் அரிதானது. அதை, இந்த 17-வது மக்களவையின் மூலம் நாடு அனுபவித்து வருகிறது. இதே லோக் சபா தொடர நாடு ஆசீர்வதிக்கும் என்று நான் நம்புகிறேன்.

பிரதமர் மோடி

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று அனைவரும் விவாதித்து வந்தனர். ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பின்னர் அதில் நாங்கள் முடிவெடுத்த பிறகு, இன்று புதிய நாடாளுமன்றத்தில் அனைவரும் அமர்ந்திருக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மக்கள், சமூகநீதி இல்லாமல் இருந்துவந்தனர். இன்று, சமூகநீதிக்கான எங்களின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, பிரிவு 350-ஐ நீக்கி ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சமூகநீதியைக் கொண்டு வந்ததில், நாங்கள் திருப்தி அடைகிறோம்.

பிரதமர் மோடி

75 ஆண்டுகளாக, ஆங்கிலேயர்கள் வழங்கிய தண்டனைச் சட்டத்தின் மூலம் நாம் வாழ்ந்தோம். இந்த நாடு 75 ஆண்டுகள் தண்டனைச் சட்டத்தின்கீழ் வாழ்ந்திருக்கலாம். ஆனால், அடுத்த தலைமுறை நியாய சன்ஹிதாவுடன் வாழும் என்று நாம் பெருமையுடன் கூறலாம். அடுத்த 25 ஆண்டுகள் நம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானவை. அதோடு, தேர்தல் ஒன்றும் வெகு தொலைவில் இல்லை. அதனால், ஒரு சிலர் பதட்டமாக இருக்கலாம். ஆனால், தேர்தல் என்பது ஜனநாயகத்தின் இன்றியமையாத ஒன்று. நாம் அனைவரும் அதைப் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறோம்” என்று கூறி முடித்தார்.

இனி, அடுத்த 18-வது மக்களவையில், மோடி பிரதமராகவே உரையாற்றுவாரா, அமைச்சராக உரையாற்றுவாரா, இல்லை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எம்.பி-யாக உரையாற்றுவாரா போன்ற கேள்விகளுக்கு, மக்களைவைத் தேர்தலிடமே விடைகள் இருக்கிறது. அதுவரையில் இதுவே பிரதமராக மோடியின் கடைசி உரை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.