அமெரிக்காவில் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் தனேஜா உயிரிழந்தார்.

அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம், டன் லோரிங் நகரை தலைமையிடமாகக் கொண்டு டைனமோ டெக்னாலஜிஸ் நிறுவனம் செயல் படுகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் தனேஜா ( 41 ) பதவி வகித்தார். இவர் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர் ஆவார். கடந்த 2-ம் தேதி அமெரிக்க தலை நகர் வாஷிங்டனில் உள்ள ஓட்டலுக்கு விவேக் சென்றார். அங்கு அவருக்கும் மர்ம நபர் ஒருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது மர்ம நபர் தாக்கியதில் விவேக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். ஓட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு போலீஸார் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த 7-ம்தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மர்ம நபரின் சிசிடிவி வீடியோவை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அவர் குறித்து துப்பு கொடுப்போருக்கு ரூ.21 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று போலீஸார் அறிவித்து உள்ளனர்.

இனவெறி தாக்குதல்: அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள், அந்த நாட்டில் பணியாற்றும் இந்தியர்கள் மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினர் மீது தொடர்ந்து இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் 4 இந்திய மாணவர்கள் கொலை செய்யப்பட்டனர். கடந்த 4-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்திய வம்சாவளி மாணவர் சையது என்பவரை 3 மர்ம நபர்கள் மிகக் கொடூரமாக தாக்கினர். இந்தியர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.