
காமெடி வில்லனும் சீரியஸ் காமெடியனும் இணைந்து நடிக்கும் 'தெக்கு வடக்கு'
திமிரு படம் மூலம் தமிழ் திரை உலகில் சிறிய அளவில் வில்லனாக அறிமுகமான மலையாள நடிகர் விநாயகன் கடந்த வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இவர் படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தாலும் பல காட்சிகளில் நகைச்சுவையாக நடிக்கவும் தவறவில்லை.
அதேபோல மலையாளத் திரையுலகில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்து தற்போது சீரியஸான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தற்போது இவர்கள் இருவரும் தெக்கு வடக்கு என்கிற படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.
இந்த படத்தை பிரேம் சங்கர் என்பவர் இயக்குகிறார். வரும் பிப்ரவரி 12ம் தேதி துவக்க விழா பூஜையுடன் இந்த படம் துவங்க இருக்கிறது. படத்தின் டைட்டிலிலேயே தெக்கு வடக்கு என இருப்பதால் இரண்டு நடிகர்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.