பாட்னா: பிஹார் சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், தே.ஜ.கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி இந்துஸ்தானி அவாம்மோர்ச்சா கட்சியின் 4 எம்எல்ஏ.க்களுக்கு முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உத்தரவிட்டுள்ளார்.
பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் மெகா கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் தே.ஜ.கூட்டணியுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்தார். இந்த அரசு சட்டப் பேரவையில் நாளை நம்பிக்கைவாக்கெடுப்பை சந்திக்கிறது. இதை சீர்குலைக்கும் முயற்சியில் மெகா கூட்டணி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மெகாகூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) பிரிவு தலைவர் மெகபூப் ஆலம், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சியை நேற்று சந்தித்து பேசினார். இந்நிலையில் மாஞ்சி அளித்த பேட்டியில், ‘‘எனது கட்சியின் 4 எம்எல்ஏ.க்களும் நிதிஷ் குமார் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.