`மம்முட்டி முதல் ஷேன் நிகம் வரை'; மலையாள நடிகர்கள் தமிழில் அறிமுகமான படங்கள்!- ஓர் அலசல்!

இந்த வருடம் இரண்டு புதிய வரவுகள் தமிழ் சினிமாவுக்கு மலையாள சினிமாவிலிருந்து கிடைக்கவிருக்கிறது.

மலையாளப் படங்களின் வழியே தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர்கள் ஷேன் நிகமும், உன்னி முகுந்தனும் நேரடியாகத் தமிழில் அறிமுகமாகவிருக்கிறார்கள். தெலுங்கு, மலையாளம் எனப் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு அறிமுகமாகும் நட்சத்திரங்களின் புதுமையான தமிழ் பட நடிப்பைக் காண ஆர்வமாக சினிமா ரசிகர்கள் காத்திருப்பர். இப்படியான எதிர்பார்புக்குப் பிறகு பல பிற மொழி நடிகர்கள் தமிழில் அறிமுகமாகி ஜொலித்துக் காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, மலையாள நடிகர்கள் பலர் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிவாகியிருக்கிறார்கள். மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் தமிழில் எந்த படத்தின் மூலமாக அறிமுகமானார்கள், அவர்களின் ரீசண்ட் ரிலீஸ், அடுத்த ரிலீஸ் என்பது குறித்து பார்க்கலாம்.

மம்முட்டி:

350-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்தவர் தமிழிலும் அவ்வபோது கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இவர் தமிழில் ‘மெளனம் சம்மதம்’ என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார். இதன் பிறகு இயக்குநர் கே. பாலசந்திரன் இயக்கத்தில் ‘அழகன்’ திரைப்படத்திலும், இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் ‘தளபதி’ படத்திலும் நடித்து தனது ஆழமான முத்திரையை தமிழ் சினிமாவில் பதித்தார். இவர் தமிழில் கடைசியாக இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகயிருந்த ‘ பேரன்பு’ திரைப்படத்தில் நடித்திருந்தார். மம்முட்டியின் கதை மற்றும் கதாபாத்திர தேர்வுக்கு கேரளாவிலும் சரி, கோலிவுட்டிலும் சரி அளப்பரிய ரசிகர்கள் கூட்டமிருக்கிறது. அப்படி சமீபத்தில் இவர் ஏற்று நடித்திருந்த ‘Kaathal The Core’ திரைப்படத்தின் மேத்யூ கதாபாத்திரமும் ஒரு மைல்கல்.

mamooty and mohanlal

மோகன் லால்:

‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் வில்லனாகதான் முதலில் அறிமுகமானார் லாலேட்டன். இதன் பிறகு ‘ஆட்டக்கலசம்’ திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகனாக மலையாள சினிமாவில் உருவெடுத்தார். இவர் தமிழில் கேமியோ ரோலில்தான் முதலில் அறிமுகமானார். இயக்குநர் ப்ரியதர்ஷன் தமிழில் இயக்கியிருந்த ‘கோபுர வாசலிலே’ படத்தில் கேமியோ செய்திருப்பார். இதன் பிறகு 1997 ஆம் ஆண்டு இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘இருவர்’ திரைப்படத்தில் முழு நீள கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இதற்கு முன்பே இவரின் ‘காலாபாணி’ என்கிற மலையாளத் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு `சிறைச்சாலை’ என்ற பெயரில் வெளியானது. இப்படத்திலேயே அவரின் நடிப்பு கவனம் பெற்றது. சமீபத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் மேலும் ஒரு உயரத்தை தொட்டிருக்கிறார்.

துல்கர் சல்மான்:

துல்கர் சல்மான் ‘செகண்ட் ஷோ’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இதன் பிறகு ‘உஸ்தத் ஹோட்டல்’, ‘ABCD’ படங்களின் மூலம் மலையாள சினிமாவில் தன்னை ஆழமாக பதிவு செய்துக் கொண்டார். தமிழில் இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘ வாயை மூடிப் பேசவும்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் ‘ ஓ காதல் கண்மணி ‘ படத்தில் நடித்து தமிழ் மக்கள் மனதில் பெரிதளவில் பரிச்சயமானார். இவர் நடிப்பில் கடைசியாகத் தமிழில் வெளியாகியிருந்த திரைப்படம் ‘ ஹே சினாமிகா’. தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார்.

Dulquer salman and prithviraj

ப்ரித்விராஜ்:

‘நக்‌ஷத்திரகண்ணுல ராஜகுமாரன் அவனுன்டொரு ராஜகுமாரி’ என்ற திரைப்படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமானார், ப்ரித்விராஜ். ஆனால், இதற்கு முன்பே ‘நந்தனம்’ என்ற திரைப்படத்தில் நடித்துவிட்டார். இப்படம் தாமதமாகதான் வெளியானது. தமிழில் இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கனா கண்டேன்’ திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் இதன் பிறகு மொழி, பாரிஜாதம், ராவணன் திரைப்படத்தின் மூலம் தன்னை கோலிவுட்டிலும் பதிவு செய்தார். இவர் கடைசியாக தமிழில் இயக்குநர் வசந்த பாலனின் ‘ காவியத் தலைவன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நிவின் பாலி:

இயக்குநர் வினீத் ஶ்ரீனிவாசனின் ‘ மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக மாலிவிட்டில் தடம் பதித்தவர், நிவின் பாலி. இவர் நடித்திருந்த ‘பெங்களூரு டேஸ்’, ‘ப்ரேமம்’ ஆகியத் திரைப்படங்கள் இவரை சினிமா தளத்தில் அடுத்தடுத்த உயரங்களுக்கு அழைத்துச் சென்றது. தமிழில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘நேரம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ‘ரிச்சி’ திரைப்படத்தில் நடித்தவர் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கிற ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் சமீபத்தில் ரோட்டர்டேம் திரைப்படத் விழாவில் திரையிடப்பட்டது.

Nivin Pauly and Fahad fazil

ஃபகத் பாசில்:

தனது தந்தை பாசில் இயக்கத்தில் ‘கையேதும் தூரத்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக மலையாள சினிமாவில் அறிமுகமானர். முதல் படத்திற்குப் பிறகு 7 வருட இடைவெளி எடுத்துக் கொண்டு ‘கேரளா கஃபே’ ஆந்தாலஜியில் நடித்தார். தமிழில் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது ரஜினியுடன் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமின்றி வடிவேலுவுடன் ‘மாரீசன்’ படத்தில் நடித்து வருகிறார்.

டொவினோ தாமஸ்:

2012-ல் வெளியான ‘பிரபுவின்டே மக்கள்’ என்ற திரைப்படத்தின் மூலமாகதான் டொவினோ தாமஸ் முதன்முதலில் மலையாளத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ‘7th டே’, ‘ABCD’ ஆகியத் திரைப்படங்கள் மூலம் தனது இருப்பை மலையாள சினிமாவில் ஆழமாகப் பதிவு செய்தார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு ‘ அபியும் அனுவும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் தடம் பதித்தார். இதன் பிறகு நடிகர் தனுஷுடன் ‘மாரி – 2’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

Shane nigam and tovino thomas

ஷேன் நிகம்:

நடிகர் ப்ரித்விராஜின் ‘தாந்தோனி’ என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமானார், ஷேன் நிகம். இதன் பிறகு ‘கிஸ்மத்’, ‘கும்பளங்கி நைட்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் மூலம் பெரியளவில் பரிச்சயமானவருக்கு கடந்த ஆண்டு ‘RDX’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட். தற்போது தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார். ‘ரங்கோலி’ திரைப்படத்தை இயக்கிய வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ‘மெட்ராஸ்காரன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இவர்கள் மட்டுமல்லாமல் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ‘கருடன்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். பல குணச்சித்திர வேடங்களிலும் மலையாள நடிகர்கள் அவ்வபோது தமிழில் நடித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.