வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 2வது டி20 போட்டியில் சதம்; ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்

அடிலெய்டு,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்களுடன் 120 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதி கட்டத்தில் அவருடன் ஜோடி சேர்ந்த டிம் டேவிட்டும் அதிரடியாக விளையாடினார். 14 பந்துகளை சந்தித்த டிம் டேவிட் அதில் 31 ரன்கள் குவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஆடி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் மேக்ஸ்வெல் சதம் அடித்ததன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் ரோகித் சர்மாவுடன் ( 5 சதம் ) தற்போது மேக்ஸ்வெல்லும் (5 சதம்) இணைந்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் ( 4 சதம்), பாபர் ஆசம் (3 சதம்), காலின் முன்ரோ (3 சதம்) ஆகியோர் உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.