பாட்னா: பிஹார் சட்டப்பேரவையில் முதல்வர்நிதிஷ்குமார் தலைமையிலான பாஜககூட்டணி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஜனவரி இறுதியில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பாஜக கூட்டணியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 28-ம் தேதி பிஹாரில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது. 9-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்றார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
இந்த சூழலில், பிஹார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பல்வேறு திருப்பங்களால், ஆளும் பாஜக கூட்டணி அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக 78, ஐக்கிய ஜனதா தளம் 45,இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 4,ஒரு சுயேச்சை எம்எல்ஏ என பாஜககூட்டணி அரசுக்கு 128 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்களின் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் 45 எம்எல்ஏக்களில் பிமா பார்தி, சஞ்சீவ் சிங், திலீப் ராய், சுதர்சன் ஆகிய 4 எம்எல்ஏக்கள் வரவில்லை. அவர்கள் தங்களது செல்போன்களையும் அணைத்து வைத்துள்ளனர்.
பாஜக எம்எல்ஏக்கள் பிஹாரின் கயா நகரில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த கட்சியின் 78 எம்எல்ஏக்களில் 3 பேர் ஓட்டலுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பிஹார் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான விஜய் சவுத்ரி கூறும்போது, “3 எம்எல்ஏக்கள் கயா ஓட்டலுக்கு வரவில்லை. அதற்கான காரணத்தை அவர்கள் கூறிவிட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக கூட்டணி அரசு நிச்சயம் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.
ஜிதன்ராம் முடிவு என்ன? பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சாவில் 4 எம்எல்ஏக்கள்உள்ளனர். ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்த கட்சியின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன. பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரையும், செய்தியாளர்களையும் ஜிதன்ராம் மாஞ்சி தொடர்ந்து தவிர்த்து வருகிறார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிலர் அவரை தனியாக சந்தித்து பேசியுள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதுமர்மமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இண்டியா கூட்டணியின் பலம்: எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 79, காங்கிரஸ் 19, கம்யூனிஸ்ட் கட்சிகள் 16 என 114 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. ஏஐஎம்ஐஎம் கட்சியின் ஒரு எம்எல்ஏ இண்டியா கூட்டணியை ஆதரிக்கக்கூடும் என்று தெரிகிறது.
காங்கிரஸின் 19 எம்எல்ஏக்களும் ஹைதராபாத்தில் உள்ள ஓட்டலில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். வாக்கெடுப்பின்போது அவர்கள் அவையில் இருப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஷ்டிரிய ஜனதா தள எம்எல்ஏக்கள், லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவின் பாட்னா வீட்டில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த கட்சியின் 79 எம்எல்ஏக்களில் 2 பேர் வரவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் 16 எம்எல்ஏக்களும் தேஜஸ்வி வீட்டில் உள்ளனர்.
பிஹார் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இந்த சூழலில், ஆளும் கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த சில எம்எல்ஏக்களின் செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டிருப்பதும், ஜிதன்ராம் மாஞ்சியின் மவுனமும் பரபரப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவடைந்த பிறகே உண்மையான நிலவரம் தெரியவரும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “பிஹாரின் தற்போதைய அரசியல் சூழல் காரணமாக சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளன. இவை தொடர்பாக உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். வருமானவரித் துறையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளன.