தமிழ்நாட்டின் சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் நேற்றைய தினம் முதல் நடந்து வருகிறது. இன்று கேள்வி பதில் நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக எழுந்து தொகுதி பிரச்னைகளை விவாதித்தனர். அப்போது பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி, “சம்சாரம் இல்லாமல்கூட மனிதன் வாழலாம். ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது. தாயின் கருவறை பரிசோதனை (ஸ்கேன்) முதல் கல்லறை வரை அனைத்திற்கும் மின்சாரப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக 2022-ம் ஆண்டு தமிழ்நாட்டில் 3,24,65,000 பேராக இருந்த மின் நுகர்வோர் எண்ணிக்கை, 2023-ம் ஆண்டு 3,31,16,000 பேர் என அதிகரித்திருக்கிறது. தமிழகத்தின் மின் தேவை 17 ஆயிரம் மெகா வாட்ஸ். ஆனால் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி 16,915 மெகா வாட்ஸ். இதில் ஏற்படும் பற்றாக்குறையான மின்சாரத்தை வெளியில் வாங்கிக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் நீர் மின் நிலையங்கள் மூலமாகக் குந்தா, காடம்பாறை, மேட்டூர் ஆகிய பெரிய அணைகள், சிற்றணைகள், கதவணைகள் என மொத்தம் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் 47 இருக்கிறது.
இவற்றின் மூலமாக 2320 மெகா வாட்ஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒகேனக்கல் போன்ற இடங்களில் கனமழை பெய்யும் நேரங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. இதனால், ஆண்டுக்கு 16, 250 டி.எம்.சி தண்ணீர் கடலுக்குச் செல்கிறது. அது போன்ற இடங்களில் நீர்மின் நிலையங்கள் அமைத்தால் பிரயோஜனமாக இருக்கும். இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தமிழ்நாடு அரசு முன்வருமா என்பதை மறுபரிசீலனை செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” எனப் பேசி முடித்தார்.
இதற்குப் பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஜி.கே.மணி, மின்சாரத்தின் தேவையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திப் பேசினார். ஆனால் துவக்கத்தில் சம்சாரம் இல்லாமல் இருந்து விடலாம் எனச் சொன்னார்கள். இதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், நான் இதை ஏற்றுக் கொள்ளவில்லை” எனக் கூறியதும், சட்டசபை சிரிப்பலையால் நிறைந்தது.
தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,“ஜி.கே.மணி கூறியதைப்போல் பல்வேறு மின் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அனல் மின் நிலைய திட்டங்கள், காற்றாலை மூலமாக இருக்கக்கூடிய மின் உற்பத்தி திட்டங்கள், புனல் மின் நிலைய திட்டங்கள் எனப் பல திட்டங்களை நாம் உருவாக்கி வருகிறோம். பொதுவாக உலகில் மரபு சாரா எரிசக்தியை நோக்கி நாம் பயணிக்கத் தொடங்கிவிட்டோம்.
வெளிநாடுகளில் அனல் மின் நிலையங்கள் இருக்கும் இடங்களில் எங்கு மாசு உற்பத்தியாகிறதோ அந்த இடங்களில் அபராதம் விதிக்கும் நிலை உள்ளது. காற்றாலை, சூரிய மின் திட்டங்களுக்கான முதலீடுகள் தென் தமிழகத்தை நோக்கி வருகின்றன. எனவே தமிழ்நாடு மரபு சாரா எரிசக்தியை உருவாக்குவதில் முன்னிலை வகித்து வருகிறது” எனத் தெரிவித்தார்.