சென்னை: தமிழக அரசு முதன்மை செயலர் பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைத்து 4 நாட்கள் கடந்தும் பல்கலைக்கழக பதிவாளரை இதுவரை பணியிடை நீக்கம் செய்யாததைக் கண்டித்து பெரியார் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில் இருந்து பேராசிரியர்கள் வெளிநடப்பு செய்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் குழுக் கூட்டம் இன்று துணை வேந்தர் ஜெகநாதன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆட்சி மன்ற குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆட்சிப் பேரவைக் குழுக் கூட்டத்தில் அரசு கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்திட தமிழக அரசு முதன்மை செயலர் பரிந்துரைத்து நான்கு நாட்கள் கடந்தும், அரசின் உத்தரவை செயல்படுத்தாமல், இதுவரை அவரை பணியிடை நீக்கம் செய்யாமல், அவருக்கு மருத்துவ விடுப்பு அளித்தது குறித்து பேராசிரியர்கள் பலரும் ஆட்சி மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பி பேசினர்.
தொடர்ந்து, ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தேர்தலை அவசர அவசரமாக நடத்த வேண்டிய அவசியமென்ன என்றும், பொருளே இல்லாமல் ஆட்சி பேரவை கூட்டம் நடத்துவதற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடாமல் இருப்பதற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பெரியார் பல்கலை கழக துணை வேந்தர் ஜெகநாதன் பதில் அளித்து பேசாமல் மவுனம் காத்தார். ஆசிரியர்களின் தொடர்ச்சியான கேள்விக்கு பின்னர், அரசின் உத்தரவை செயல்படுத்த முடியாது என்றும், மைனாரிட்டியாக உள்ள அரசு கல்லூரி பேராசிரியர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று துணைவேந்தர் ஜெகநாதன் ஆட்சி பேரவை குழு கூட்டத்தில் பதில் அளித்து பேசினார்.
துணைவேந்தரின் பதிலை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பை சேர்ந்த ஆட்சிப் பேரவை குழு உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து கூட்ட அரங்கின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தன்னிச்சையாக செயல்படும் துணைவேந்தரை கண்டித்தும், அவசர கதியில் தனியார் கல்லூரிக்கு ஆதரவாக செயல்படுத்தும் வகையில் நடத்துகின்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கூறி முழக்கங்களை எழுப்பி கூட்ட அரங்குக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் கூட்ட அரங்குக்குள் சென்ற அரசு கல்லூரி பேராசிரியர்கள் விதிமுறைகளை மீறி நடைபெறுகின்ற இந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தன்னிச்சையாக செயல்படும் துணைவேந்தரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய படி கூட்ட அரங்குக்குள் சென்ற போது, துணைவேந்தருக்கும் பேராரியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை செய்தி சேகரித்தபடி இருந்த செய்தியாளர்களை துணைவேந்தர் ஜெகநாதன் கூட்ட அரங்கத்தில் இருந்து வெளி்யேற்றி கதவை மூடியதுடன், செய்தியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாரை அழைத்தார். இதனால், அங்கு செய்தியாளர்கள் துணை வேந்தரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பேராசிரியர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, பேரவை கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டு, துணைவேந்தர் ஜெகநாதன் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார்.