புதுடெல்லி: விவசாயிகள் நடத்தும் ‘டெல்லி சலோ’ பேரணியால் டெல்லி – நொய்டா சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். ஓராண்டுக்கு மேல் நீடித்த போராட்டத்தின் இறுதியில், வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி, விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் செவ்வாய்க்கிழமை டெல்லி நோக்கி பேரணி நடத்த அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக டெல்லி-நொய்டா சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டடுள்ளது. மேலும், டெல்லியில் விவசாயிகள் நடத்தும் பேரணியால் காஜிபூர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க காசிபூர், சிங்கு மற்றும் திக்ரி உள்ளிட்ட பல இடங்களில் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேம்பாலத்தில் சிக்கிய ஒரு பயணி, “ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிற்கிறோம். ஆனால் ஒரு கிலோமீட்டர் மட்டுமே பயணிக்க முடிகிறது. கடந்த 30 நிமிடங்களாக வாகனங்கள் ஒரே இடத்தில்தான் நிற்கின்றன. போலீஸார் சாலை முழுவதுமாக மூடப்படவில்லை என்று கூறுகிறார்கள், ஆனால் வேலி பகுதியில் கடுமையான சோதனை மேற்கொள்ளப்படுகிறது” என்றார். 2020 விவசாய போராட்டத்தை முன்னின்று நடத்திய சம்யுக்த கிசான் மோா்ச்சா அமைப்பின் பாரதிய கிசான் யூனியன் விவசாயிகளின் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், சம்யுக்த கிசான் மோா்ச்சா அமைப்பு போராட்டத்தில் பங்கேற்பதை இந்த முறை தவிா்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.