ஹீரோயின் சென்ட்ரிக்கோ அல்லது ஹீரோக்களின் ஜோடியோ… நயன்தாரா நடிக்கும் படங்களில் அவருக்கான ஸ்கோப் நிச்சயம் இருக்கும். சமீபத்தில் வெளியான `அன்னபூரணி’, `ஜவான்’ எனப் பல படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும். இதனை அடுத்தும் வியக்க வைக்கும் படங்கள் பலவற்றை கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா.

நயன்தாரா நடிப்பில் வரும் ஏப்ரலில் திரைக்கு வரும் படமாக ‘டெஸ்ட்’ உருவாகியுள்ளது. மாதவன், சித்தார்த் நடிப்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படமிது. இந்தப் படத்தில் நயனின் கதாபாத்திரத்தின் பெயர் குமுதா. இதன் நிறைவு நாள் படப்பிடிப்பில் கூட, நயன்தாரா, “குமுதாவை ரொம்பவே மிஸ் செய்கிறேன். குமுதாவுக்குப் பக்கபலமாக இருந்த மாதவனுக்கு நன்றி. எப்போதும் முன்னுதாரணமாக இருக்கும் நடிகர் சித்தார்த்துக்கு நன்றி. ‘டெஸ்ட்’ என்னும் தொழிலாளிகளின் அன்பினைப் புரிந்துகொள்ள நீங்கள் வெகுநாள்கள் காத்திருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என நெகிழ்ந்து போய் தெரிவித்திருந்தார்.
அந்தப் படத்தை அடுத்து ‘மண்ணாங்கட்டி Since 1960’ என்ற ஹீரோயின் சென்ட்ரிக் படத்திலும் நடித்து முடித்துவிட்டார். ‘கோலமாவு கோகிலா’ கூட்டணியான யோகி பாபுவுடன் இதில் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில், கொடைக்கானலில் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். யூடியூப்பரான டியூட் விக்கி இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஜூன் மாதம் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து விக்னேஷ் சிவன் தயாரிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனது 81வது படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார் நயன்தாரா. ஒரு வனவிலங்கிற்கும் (யானை), ஒரு பெண்ணிற்கும் இடையே உள்ள பாசப்பிணைப்புதான் படத்தின் கதை என்கிறார்கள். இப்போது சூரியை வைத்து ‘கருடன்’ படத்தை இயக்கியிருக்கும் துரை செந்தில்குமார், அந்தப் படத்தின் ரிலீஸிற்குப் பிறகே, நயன்தாரா படப்பிடிப்பைத் தொடங்குவார் என்கிறார்கள்.
இதற்கிடையே விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து ஜல்லிக்கட்டு பற்றிய ஆவணப்படமான ‘ரூட்ஸ்’ என்ற படைப்பையும் தயாரித்து வருகிறார். பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு இதை அனுப்பி வருகின்றனர்.

தவிர, ஆர்.ஜே.பாலாஜியுடன் ‘மூக்குத்தி அம்மன் 2’ டேக் ஆஃப் ஆக உள்ளதாகவும் சொல்கிறார்கள். மலையாளத்தில் நிவின் பாலியுடன், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’, ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன் 2’ ஆகிய படங்களிலும் இவரை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.