உட்கட்சி பூசல்!
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளையும் திமுக வெல்ல வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கட்சியினரிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் திமுக அல்லது அதன் கூட்டணி கட்சி என யார் இறங்கினாலும், தேனி எம்.பி தொகுதியை கைப்பற்றுவது அத்தனை எளிதானதாக இருக்காது என்கிறார்கள் உள்ளூர் உடன் பிறப்புகள் சிலர். காரணம் உட்கட்சி பூசல்!

தேனி மக்களவைத் தொகுதி, பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது. ஆண்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வென்றதாலும், போடி தொகுதியில் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வென்றதாலும், டி.டி.வி.தினகரன் முதல் முறை போட்டியிட்டு எம்.பி., ஆக தேர்வாகிய தொகுதி என்பதாலும் தேனி மக்களவைத் தொகுதி நட்சத்திர அந்தஸ்த்து பெற்றுள்ளது.
பெரியகுளம் தொகுதியாக இருந்தபோதும், தேனி தொகுதியாக மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகும் அதிகமுறை அதிமுக தான் வென்றிருக்கிறது.
ரவீந்திரநாத் மீது அதிருப்தி..!
கடந்த 2019-ல் நடந்த எம்.பி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத், அப்போது அ.ம.மு.க-வில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் என மும்முனை போட்டியில் இறங்கினர். இந்த தேர்தலின் போது தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார்.

இதையடுத்து ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக-வில் ஏற்பட்ட குழப்பங்களினால் ஓ.பி.எஸ், அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஓ.பி.எஸ் அதிமுக தொண்டர் மீட்புக்குழுவை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறார். அதேவேளையில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதற்கு நன்றி கூட தெரிவிக்க வரவில்லை என்கிறார்கள் நிர்வாகிகள். மேலும் டெல்லிக்கு நெருக்கமாக காட்டிக்கொண்டாலும், தொகுதி மேம்பாட்டுக்காக நல்ல திட்டங்களை கொண்டுவரவில்லை என மக்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
இதை பயன்படுத்தி தேனி மக்களவைத் தொகுதியை திமுக அல்லது அதன் கூட்டணி கட்சிகளால் கைப்பற்ற முடியும் என்ற நிலை இருந்தாலும், உட்கட்சி பூசல் காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதாக அக்கட்சியினரே புலம்பி வருகின்றனர். இதுவரை தேனி எம்.பி தொகுதியில் திமுக சார்பில் கம்பம் நடராஜன் 1980, ஞானகுருசாமி 1996, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆரூண் 2004, 2009 தேர்தல்களில் வென்றுள்ளனர்.

தங்க தமிழ்ச்செல்வன் வருகை
தேனி தெற்கு மாவட்டச் செயலாளராக கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணனும், வடக்கு மாவட்டச் செயலாளராக தங்கத்தமிழ்ச்செல்வனும் உள்ளனர். அதிமுக-வால் வளர்க்கப்பட்டு, அமமுக-வில் இணைந்து கடைசியாக திமுக-வில் ஐக்கியமாகி உள்ள தங்க தமிழ்ச்செல்வன் வருகையை ஆரம்பம் முதலே தேனி மாவட்ட மூத்த உடன்பிறப்புகள் பலரும் விரும்பவில்லை.
இதனால் தனக்கான ஒரு கூட்டத்தை கட்சிக்குள் உருவாக்க வேண்டும் என தெற்கு மாவட்ட எல்லைக்குள் குடியிருக்கும் கம்பம் பகுதியில் கட்சி அலுவலகம் திறந்து உள் பாலிடிக்ஸ் செய்யத் தொடங்கினார். இதனால் தங்தத்தமிழ்ச்செல்வன், ராமகிருஷ்ணன் இடையே தொடங்கிய பனிப்போர் எரிமலையாக வெடிக்க தொடங்கியது. இருவரும் மாறி மாறி கட்சித் தலைமைக்கு புகார் மழையை பொழிந்தனர். இருவரையும் ஆஃப் செய்யும் விதமாக டோஸ் கொடுக்கப்பட்டதால் அமைதியாகினர்.

இரு மாவட்டச் செயலாளர்களும் திமுக-வில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி கொடுக்காமல், புதிததாக கட்சியில் இணைந்தவர்களுக்கும், பணபலம் படைத்தவர்களுக்கும் தான் பதவி வழங்கினர் என்ற குற்றச்சாட்டும் கட்சியினர் மத்தியில் உள்ளது.
தங்த தமிழ்ச்செல்வன் ஓ.பி.எஸ்-க்கு எதிராக அரசியல் செய்வார் என எதிர்பார்த்தால் அவர் திமுகவையே அட்டாக் செய்கிறார் என குற்றம்சாட்டுகிறது அவரின் எதிர்தரப்பு. எளிதில் அவரை அணுக முடியவில்லை. தடித்த வார்த்தைகளில் பேசுகிறார், அவமதிக்கிறார் போன்ற குற்றச்சாட்டுகள் வரிசை கட்டுகின்றன.

மறுபுறம், கம்பம் ராமகிருஷ்ணன் மகன் வசந்தன், தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளராக உள்ளார். இவர் தான் கம்பம் தொகுதிக்கு ஆட்டிங் எம்.எல்.ஏ.வாக உள்ளாராம். உள்கட்சித் தேர்தலின் போது ராமகிருஷ்ணன், வசந்தனுக்கு எதிராக அடிதடி, தீக்குளிப்பு முயற்சி, சாலை மறியலில் சொந்த கட்சியினரே ஈடுபட்டனர். கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைக்க வந்த கம்பம் ராமகிருஷ்ணனை அப்பகுதி மக்கள் எவ்வித நலத்திட்டம் செய்துதரவில்லை எனக் கூறி சிறை பிடித்த சம்பவமும் பரபரப்பாகியது.
இப்படி தேனி மாவட்ட திமுக-வின் நிலைமை சிக்கலில் உள்ளதாக வேதனை தெரிவிக்கிறார்கள் உடன்பிறப்புகள். தொடக்கத்தில் தேனி எம்.பி தொகுதியில் போட்டியிட தங்க தமிழ்ச்செல்வன் ஆர்வம் காட்டி வந்தார். அவருக்கு சீட் கொடுத்தால் சொந்த கட்சியினரே தேர்தல் வேலை பார்க்காமல் தோல்விடைய செய்ய தயாராக உள்ளனர். இதையறிந்த தங்க தமிழ்ச்செல்வன் அவருடைய நெருங்கிய நண்பரும் நிதிநிறுவனங்கள் நடத்தி வருபவரும், தேசிய செட்டியார் பேரவை தலைவருமான ஜெகநாத் என்பவருக்கு சீட் பெற்றுத்தர முயற்சி செய்கிறாராம். இதற்காக தான் சில மாதங்களுக்கு முன் முதல்வரிடம் அழைத்து சென்று அவரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். தன் ஆதரவாளர்களிடம், `அவர் ஜெயிச்சா நான் ஜெயிச்ச மாதிரி’ என பெருந்தன்மையாகவும் பேசிவருகிறாராம். எனினும் தலைமையே சொன்னால், தானே களமிறங்கி ஒரு கை பார்த்துவிடலாம் என்றும் திட்டத்தில் இருக்கிறாராம் தங்க தமிழ்ச்செல்வன்,
கம்பம் ராமகிருஷ்ணன் மகனுக்கு சீட் கேட்கக் கூட தயாராக இல்லை. ஏனென்றால் தனக்கு பின் அவரை கம்பம் எம்.எல்.ஏ ஆக்க வேண்டும் என்பதே அவரின் திட்டமாம். அப்போது தான் மாநில அரசியலில் நீடிக்க முடியும் என நினைக்கிறாராம்.

இதனிடையே, கடந்த முறையை போலவே திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினர் தேனி தொகுதியை கேட்கிறார்களாம். ஏற்கெனவே 2 முறை எம்.பி ஆன ஆரூணுக்கு வயதாகிவிட்டது. அவருக்கு சீட் கொடுப்பதை திமுக-வினர் விரும்பவில்லை. திமுக-வில் உள்ள அவருடைய இரண்டாவது மகன் இம்ரானுக்கு சீட் கேட்கப்பட்டு வருகிறது என்கிறார்கள். தொகுதிக்கு அறிமுகமே இல்லாத அவரையும் மக்கள் எப்படி ஏற்பார்கள் என தெரியவில்லை.
இதற்கிடையே அமைச்சர் மூர்த்தி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளரான மணிமாறனை தேனி தொகுதியில் நிறுத்தி வெல்ல வைப்பதாகக் கூறி வருகிறாராம். தேனி தொகுதிக்குள் மூர்த்தி கன்ட்ரோலில் உள்ள சோழவந்தான் தொகுதி, மணிமாறன் எல்லைக்குள் உள்ள உசிலம்பட்டி தொகுதிகள் வருகிறது. மேலும் தேனி மாவட்டத்தில் முக்குலத்தோர் சமுதாய வாக்குகளும் அதிகம் இருக்கிறது என்பதால் மணிமாறனை நிறுத்த காய்நகர்த்தி வருகின்றனர். இந்த திட்டம் எதற்கென விசாரித்தால், மணிமாறனை எம்.பி ஆக்கி விட்டால் மூர்த்தி மதுரை மாவட்ட செயலாளராக எவ்வித இடையூறும் இன்றி தனியாக வலம்வரலாம் என்பதே காரணம் என்கின்றார்கள்.

இவ்வாறான குழப்பங்கள் நீடிப்பதால் திமுக அல்லது அதன் கூட்டணி கட்சியினர் தேனி எம்.பி தொகுதியை கைப்பற்றுவது சவால் நிறைந்ததாகவே இருக்கும் என்கின்றனர் விவமறிந்த உடன்பிறப்புகள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY