மறைந்த இயக்குநர் கே.வி ஆனந்த் வீட்டிற்கு, தனது குடும்பத்துடன் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சூர்யா. சூர்யாவின் சினிமா கரியரில் மாபெரும் வெற்றிப் படமாகவும் வசூலையும் குவித்த படங்களில் ஒன்று கே.வி ஆனந்த் இயக்கிய ‘அயன்’.
அதுமட்டுமல்ல, ‘மாற்றான்’, ‘காப்பான்’ படங்களிலும் அடுத்தடுத்து கே.வி ஆனந்த் – சூர்யா கூட்டணி இணைந்தது. கே.வி ஆனந்த் மறைந்தாலும் தனது ஆதர்ச இயக்குநர் வீட்டிற்கு சூர்யா விசிட் அடித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சந்திப்பு குறித்து கே.வி ஆனந்த் மனைவி சசிகலாவிடம் பேசினேன்.
“சூர்யா சார் எங்க வீட்டுக்கு வந்ததை நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்ல. எங்களுக்கும் சூர்யா சார் குடும்பத்துக்கும் 30 வருடங்களுக்குமேல நல்ல பழக்கம். இன்னும் சொல்லப்போனா, என்னோட கணவர் கே.வி ஆனந்த் 5-வது படிக்கும்போது ஓவியப் போட்டியில் முதல் பரிசு வாங்கியிருக்கார். அப்போ, சீஃப் கெஸ்ட்டா வந்து அந்தப் பரிசையே கொடுத்தவர் சிவகுமார் சார்தான்.

அதுமட்டுமில்லாம, சூர்யா சார் அறிமுகமான ‘நேருக்கு நேர்’ படத்துல கணவர்தான் ஒளிப்பதிவாளர். படம் ஹிட் ஆனதோட, பாடல்கள் எல்லாமே ஒளிப்பதிவுக்காகவும் பெரிசா பேசப்பட்டுச்சு. ‘நேருக்கு நேர்’ படத்திலிருந்தே கணவருக்கும் சூர்யா சாருக்கும் அன்பும் நட்பும் தொடர்ந்து வந்திட்டிருந்துச்சு. ‘அயன்’ படத்துக்கப்புறம், அது இன்னும் அதிகமாகிடுச்சு.
என் கணவரை ‘அண்ணா அண்ணா’னு ரொம்ப அன்பா கூப்பிடுவார் சூர்யா சார். எங்களைப் போலவே, கணவர் இறப்பு அவரையும் ரொம்பவே பாதிச்சது. அப்போ, வீட்டுக்கு வந்து ஆறுதல் சொல்லிட்டுப் போனார். அதுக்கப்புறம், என் மூத்தப் பொண்ணு சாதனாவுக்கு போன வருஷம் திருமணம் பண்ணினோம். அதுக்காக, சூர்யா சாருக்கு இன்விடேஷன் வெக்கப் போனப்போ, ‘இந்தத் தேதியில ஷூட்டிங் இருக்கு. என்னால வரமுடியாது’ங்கிறதை தெளிவா சொன்னார். சிலர் வர்றேன்னு சொல்லிட்டு வராம போய்டுவாங்க.
ஆனா, பத்திரிகை வைக்கும்போதே, தன்னோட சூழலைச் சொல்லி புரியவெச்சார் சூர்யா சார். ஷூட்டிங் பிஸியால, திருமணத்துக்கு வரமுடியலைன்னாலும் அவரோட மேனேஜர் மூலமா தங்கக் காசுகளை மகளுக்கு பரிசா கொடுத்தனுப்பி வாழ்த்தினார். அவர், அதோடவும் நிறுத்திடல.
திருமணம் முடிஞ்சதுக்கப்புறமும் போன்ல எங்கக் குடும்பம், மகள்களின் படிப்பு, திருமண வாழ்க்கை பத்தியெல்லாம் அடிக்கடி அக்கறையோட நலம் விசாரிப்பார். அப்படியொரு நல்ல மனம் படைத்தவர்.
அப்படித்தான், போனவாரம் திடீர்னு வீட்டுக்கு சிவகுமார் சாரோட வந்தார். நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல. அன்னைக்கு காலையிலத்தான் தெரியும். சூர்யா சாருக்காக இடியாப்பம், இறால் ஃப்ரை, ஃபிஷ் ஃப்ரை, காய்கறி சூப், புல்கா, சிக்கன்னு நானே பார்த்து பார்த்து சமைச்சேன். சிவகுமார் சார். நான் வெஜ் சாப்பிடமாட்டார். அதனால, அவருக்கும் தனியா சமைச்சிருந்தேன். ரெண்டு பேருமே மகள்களோட விரும்பி சாப்டாங்க. அதுல, மகள்களுக்கும் ரொம்ப சந்தோஷம்.
பெரிய பொண்ணு சாதனா திருமணத்துக்கு வரமுடியாட்டியும், இப்போ வந்து ஆசிர்வாதம் பண்ணினாங்க. என் கணவர் இறந்தாலும் இதையெல்லாம் பார்த்து நிச்சயம் சந்தோஷப்படுவார்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. மார்ஷல் கம்பெனியோட சவுண்டு ஸ்பீக்கரை மகளுக்கு பரிசா கொடுத்தார் சூர்யா சார். சிவகுமார் சாரும் அவர் வரைஞ்ச ஓவியங்களையும் புத்தகமும் கொடுத்தார்.
‘அண்ணன் இல்லாத வருத்தம் எப்பவும் மனசுல இருக்கும். நாங்க இருக்கோம். எதுக்கும் கவலைப்படாதீங்க’ன்னு சூர்யா சார் சொன்னதுல எல்லோருக்குமே சந்தோஷம். என் சின்ன பொண்ணு எம்.பி.பிஸ் படிக்கிறா. அடுத்து, எம்.டி படிக்க தயாராகிட்டிருக்கா, அவளோட படிப்புப் பத்தியெல்லாம் அக்கறையா விசாரிச்சாரு.
எப்போ எனக்கு ஷூட்டிங் இல்லைன்னாலும் கண்டிப்பா வீட்டுக்கு வந்து பார்க்கிறேன்னு சொல்லிட்டு போனார். என் கணவரை, ’அண்ணன்’னு சூர்யா சார் சொல்றது வெறும் வாயிலருந்து வரலங்கிறது மட்டும் தெரியும்” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.