ரேஷனில் மசூர் பருப்பு விநியோகிக்க கோரிய வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மசூர் பருப்பையும் விநியோகிக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க, தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வெளிநாடுகளில் இருந்து மசூர் பருப்பு இறக்குமதி செய்யும் நிறுவனமான சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், துவரம் பருப்புக்கு பதில், அதே சத்துக்களை கொண்ட விலைக் குறைவான மசூர் பருப்பை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்க தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. பின்னர், மசூர் பருப்பை போல தோற்றமளிக்கும் களையான கேசரி பருப்பும் புழக்கத்தில் உள்ளதாகக் கூறி மசூர் பருப்புக்கு அளித்த அனுமதியை திரும்பப் பெற்று 2007ல் தமிழக அரசு உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், அறிவியல் முறைகளை கையாண்டு, மசூர் பருப்பை அடையாளம் கண்டு, அதை பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிக்க உத்தரவிட்டது. அதன்படி மசூர் பருப்புக்கு அனுமதியளித்து 2017-ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், மசூர் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் 45 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஒரு கிலோ 130 ரூபாய் என்ற அடிப்படையில் 583 கோடியே 42 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அதே எடையில் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படும் மசூர் பருப்பு கொள்முதல் செய்ய 382 கோடியே 50 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும். எனவே, துவரம் பருப்புடன் சேர்த்து மசூர் பருப்பையும் கொள்முதல் செய்யக் கோரி எங்களது நிறுவனம் தரப்பில் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.