அரசியல், சினிமா, கலை போன்ற துறைகளில் முண்ணனியில் இருக்கும் ஆளுமைகளின் பேசப்படாத பக்கங்களை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆனந்த விகடனின், ‘கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
அதில் தமிழின் முன்னணி இயக்குநராக பல படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் அவரது பால்ய கால நினைவுகளையும், திராவிட இயக்கத்துடன் இருந்த உறவுகளையும் நம்முடன் பகிர்ந்துக் கொண்டார். அவை இங்கே

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குநர் என்ற பட்டத்தைத் தக்க வைத்துள்ளீர்கள். நீங்கள் சினிமாவிற்கு வந்தது பற்றி…
“நான் கமர்ஷியல் இயக்குநர் என்பதையே நான் முழுமையாக மறுக்கிறேன். நான் கமர்ஷியல் இயக்குநரும் கூடதான். ஆனால், நல்ல கதைப்படங்களையும் நிறைய கொடுத்திருக்கிறேன். ஆகவே நல்ல கதைப்படங்களையும் கொடுக்கும்போது, வியாபார ரீதியில் அது சென்ற பிறகு நாங்கள் கமர்ஷியல் இயக்குநராக ஆக்கப்பட்டோம். உண்மையாகவே சொல்ல ஆசைப்படுகிறேன். நான் வெறும் கமர்ஷியல் இயக்குநர் மட்டும் அல்ல. நல்ல கதைகளை, நல்ல நாடகங்களை, நல்ல நாவல்களையெல்லாம் இயக்கியிருக்கிற ஓர் இயக்குநர் என்பதை இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்”.
“நான் சினிமாவிற்கு வந்தது தற்செயலானது அல்ல. காரைக்குடியில் டி.கே. சண்முகம் அண்ணாச்சியெல்லாம் நாடகம் போட வந்தால், ஒரு நாடகம் போடமாட்டார்கள். பத்து நாளைக்கு ஒரு முறை என ஒரு மாதம், இரண்டு மாதம் நாடகம் போடுவார்கள். அந்த நாடகங்களில் நடித்த நடிகர்களெல்லாம் எங்கள் வீட்டைச் சுற்றி இருந்தார்கள். அவர்களெல்லாம் என் தந்தையுடைய நண்பர்கள். அதனால் நாடகம் போடப்போகும்போது என் தந்தையைச் சந்தித்துவிட்டுச் செல்வார்கள். அப்படி பார்த்துவிட்டு போகும்போது, ‘தம்பி, நாடகம் பார்க்க வர்றியா?’ என்று என்னை அழைத்துக் கொண்டுபோய்விடுவார்கள். இப்படி நாடகம் பார்க்கப் பார்க்க, அதன் மீது ஒரு விருப்பம் ஏற்பட்டது. அப்படியிருந்த காலகட்டத்தில் வெளிவந்த படம் தான் பராசக்தி. அதைப் பார்த்த பிறகு முடிவு செய்தேன். சினிமா தான் நமக்குத் தொழில் என்று.”

“ஒரு நாள் எங்க ஆசிரியர் எல்லா மாணவர்களையும் பார்த்து, ‘நீ என்னாகனும்ன்னு நெனைக்குற?’ என்று கேட்டுக்கொண்டிருந்தார். எல்லாரும், ‘நான் டாக்டராகணும்’, ‘வக்கீலாகணும்’ எனச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கேள்வி என்னிடம் வந்ததும் நான் சைலைண்ட்டா நின்றேன். ‘என்ன எல்லாரும் சொல்றாங்க, நீ ஏன் சைலண்ட்டா இருக்க?’ என்று கேட்டார். மழுப்பிக்கொண்டே இருந்தேன். அவர் அழுத்தமாக கேட்கவும், ‘நான் சினிமாக்காரனாகணும்’ என்று சொல்லிவிட்டேன். ‘இங்க வா’ என்றார். ‘சரி இன்னைக்கு நம்மளுக்கு உதைக்கப்போறாரு’ என்று எண்ணிக்கொண்டே கிட்டப் போனேன். ஆனால், அவர் என்னை உதைக்கவில்லை. மாறாக, அவர் என்னைத் தட்டிக் கொடுத்தார். ‘கலை ஆர்வமிருக்கா? சினிமாவுல சேரணுங்கிற ஆச இருக்கா? இன்னியிலிருந்து இந்தப் பள்ளிக்கூடத்தில நடக்கிற எல்லா கலை நிகழ்ச்சிகள்லயும் உன்ன சேத்துக்கச் சொல்றேன். உன்னுடைய ஆர்வத்துக்கு நாங்க ஊக்கம் கொடுப்போம்’ என்று எங்களை முதன்முதலில் பாராட்டியது அவர்தான்.”
“இன்றைக்கு பிள்ளைகள் விரும்புவதை, பெற்றோர்களோ, ஆசிரியர்களோ விரும்புவதில்லை. அவன் டாக்டரே வேண்டாம் என்று நினைப்பான். ஆனால், அவனை `டாக்டருக்குப் படி!’ என்பார்கள். பெற்றோரும் ஆசிரியர்களும் கட்டாயப்படுத்துகிறார்கள். தயவு செய்து கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்கள் விரும்புகிற போக்கில் சென்றால்தான், அவர்களுக்குப் பிடித்த மாதிரி வேலைசெய்து, தொழிலைக் கற்றுக்கொண்டு தொழிலில் முன்னுக்கு வருவார்கள். அதற்கு உதாரணம் நான் தான். மாணவர்களுக்கும் சொல்வது என்னவென்றால், குறிக்கோளை வைத்துப் படிக்க வேண்டும். ஒரு உறுதி இருக்க வேண்டும்.”

சுயமரியாதை இயக்கத்தில் முக்கியமான ஆளுமையாக இருந்தவர் உங்கள் தந்தையர் ராம் சுப்பையா. ‘சம தர்ம விலாஸ்’ என்ற உங்கள் வீட்டில் நடந்த சந்திப்புகள் பற்றி…
“என்னுடைய தந்தையார் மட்டுமல்ல, தாயாரும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்தவர் தான். நாங்கள் இருந்தது செட்டிநாடு. கடவுள், கும்பாபிஷேகம், சைவம் இப்படியெல்லாம் பாராட்டுப்படுகிற அந்த நாட்டுக்கோட்டை நகரத்தாரில், இவர்கள் தந்தைப் பெரியாரின் கொள்கைகளை ஏற்று, அந்தப் பகுதியில் சுயமரியாதையைப் பரப்பினார்கள். அதன் மூலம் அவர்களுக்குக் கிடைத்தது பேரோ, புகழோ இல்லை. எதிர்ப்பு தான். ‘சுப்பையா சாமி இல்லைங்கிறான்’, ‘பெரியார் கட்சில சேர்ந்திருக்கான்’ என்று சொல்லித் திட்டுவார்கள். அன்றைக்கு ஹோட்டல் எல்லாம் இல்லை. ஆகவே, எங்கள் வீட்டில் தங்கி தான் பிரசாரத்திற்குப் போவார்கள். தந்தைப் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் எல்லாருக்கும் எங்கள் வீடுதான் தங்குமிடம். எங்கள் வீட்டில் தங்கிவிட்டு, அங்கிருந்து இராமநாதபுரம் சுற்றுப்பயணம் என்று இரண்டு மூன்று நாள் போவார்கள்.”
“தந்தைப் பெரியாரின் மடியில் நான் இருப்பது போல் ஒரு புகைப்படம் உள்ளது. ஆகவே அந்தக் காலத்தில் இருந்தே தந்தைப் பெரியாருடனும், திராவிட இயக்கத்துடனும், திராவிடத் தலைவர்களுடனும் நாங்கள் வளர்ந்து வந்தோம். அது எங்கள் தந்தைக்கும் தாய்க்கும் மிகப் பிடித்தது.”
“தந்தைப் பெரியார் திடீரென வருவார். ‘விசாலாட்சி இன்னைக்கு ஒரு விதவை திருமணம். நீ பேசுற’ என்பார். அன்றைக்கு செட்டிநாட்டில் சென்று விதவைத் திருமணம் குறித்து எனது தாயார் பேசுவார். என்னுடைய தந்தையாருக்கு விஷம் வைத்துக் கொல்ல எல்லாம் முயற்சி செய்தார்கள். அவ்வளவு எதிர்ப்புகள் இருந்தது. ஆனால் , எங்களுக்கு இன்னொரு பக்கம் திராவிட இயக்கத் தலைவர்களோடு பழகுகிறபோது, அந்த உணர்வுகள், எண்ணங்கள், அவர்கள் பழகுகிற விதம், அவர்கள் கொடுக்கிற மரியாதை இதெல்லாம் வந்தது. தந்தைப் பெரியார் அவர்கள் நான் சிறு வயதில் இருக்கும்போது என்னைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, ‘சாப்பிட்டீங்களா?’ ,
‘ஸ்கூலுக்குப் போய்ட்டு வந்துட்டீங்களா?’ என்று எனக்கு மரியாதை கொடுத்து, ‘ங்க’ போட்டு பேசுவார். அந்த இயக்கத்தில் இருந்த யாரும் யாரையும், ‘வாடா, போடா’ என்று சொல்லி நான் கேட்டதில்லை. அண்ணாவாக இருந்தாலும் சரி, கலைஞராக இருந்தாலும் சரி ஒரு குடும்பப் பாசத்துடன் பழகினார்கள். இன்றைக்கு இருக்கும் வியாபார நோக்கங்களெல்லாம் இல்லாத காலம் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். இன்று அதை நாம் விட்டுவிட்டோம். அதை நாம் பின்பற்றவேண்டும். எந்தக் கட்சியிலாவது தலைவரைத் ‘தந்தை’ என்றோ, ‘அண்ணா’ என்றோ, ‘உடன்பிறப்பு’ அழைத்ததுண்டா? இப்படி குடும்பப்பாங்கான சுயமரியாதை கொண்ட இயக்கம் தான் திராவிட இயக்கம்.”

அரசியலான குடும்பப் பிண்ணனியில் இருந்து வந்த நீங்கள், அரசியல் பக்கம் வராது, சினிமா பக்கம் போனது ஏன்?
“அதற்குக் காரணம் என் தந்தையாரும் தாயாரும் பட்ட பாடுதான். அது ஒரு பெரிய சமுத்திரம். அந்த சமுத்திரத்தில் நம்மால் நீந்த முடியுமா என்று கேட்கும்போது, எனக்குத் தைரியம் வரவில்லை. நான் எப்போதும் நேரடியாக சென்று சண்டை போடக்கூடிய ஆளில்லை. நான் எதாவது கருத்து சொல்வதென்றால், இந்த மாதிரி நினைக்கிறேன் என்று சொல்வேனேத் தவிர, ‘இப்படித் தான் செய்யணும்’ என்று சொல்லமாட்டேன். எங்க அப்பாவிற்கு பெரியாரையோ, அண்ணாவையோ, கலைஞரைப் பற்றியோ தவறாகப் பேசினால் பிடிக்காது. அடித்துவிடுவார். அவர்களையெல்லாம் தலைவராக அல்ல; உயிரோடு கலந்தவராக நினைத்தார் எங்கள் அப்பா. அவர்களுடைய கொள்கைகள் தான் சரி, மற்றதெல்லாம் சரியில்லை என்பார். யாராவது மற்றக் கொள்கைகளைச் சொன்னால், ` ‘நீ குடியரசைப் படி’ , ‘திராவிட நாட்டைப் படி’, அப்படி நீ படிச்சா நீயும் என் ஆளாகிடுவ’ என்று பலரைப் படிக்க வைத்துக் கட்சியில் சேர்த்தவர் என் தந்தை. நம்ம ஆர்.எம் வீரப்பன் சார் எல்லாம் என் தந்தையாரின் சிஷ்யர் என்பார். இன்றைக்கும் அந்த போட்டோக்களையெல்லாம் அவருடைய அலுவலகத்தில் மாட்டி வைத்துள்ளார். அதுமாதிரி பல இளைஞர்களை இயக்கத்திற்குக் கொண்டுவந்து பணியாற்ற வைத்தப் பெருமை என் தந்தையாருக்கு உண்டு.”
சினிமா சுலபமாக இருந்ததா?
“சினிமாவில் சிரமம் இருந்தாலும், சினிமா என் மனசுக்குள் இருந்தது. நான் விருப்பத்தோடு ஒரு காரியத்தைச் செய்யும்போது, சிரமம் சிரமமாகவே தெரியாது. இப்படியெல்லாம் கஷ்டப்பட்டால் தானே, சினிமாவில் வரமுடியும் என மனசு பக்குவப்பட்டதால், அந்த சிரமம் சிரமமாகவே தெரியவில்லை. பராசக்தி வந்த சமயத்தில் தான் சினிமா எனக்குள் போனது. ஒரு 16,17 வயதிருக்கும் அப்போது. அதற்குப் பிறகு தான், நான் முழுமையா சினிமாவை விரும்ப ஆரம்பித்தேன். காரைக்குடியில தான் அந்தப் படத்தைப் பார்த்தேன். எத்தனை முறை பார்த்தேன் என்று சொல்ல முடியாது. அவ்வளவு முறை பார்த்தேன். பார்த்ததோடு மட்டுமில்லாமல், கலைஞருடைய அந்த வசனத்தை மனப்பாடம் செய்து, சிவாஜி அண்ணன் மாதிரியே நடித்துக் காண்பிப்பேன் பள்ளிக்கூடத்தில். அவரை மாதிரி தான். அவருடைய நடிப்பிற்கு யாரும் அவர் கிட்டவே போகமுடியாது. பள்ளியில் படிக்கும்போது இருந்த அந்த ஆர்வம், நான் நடிக்கும்போது மாணவர்கள் கைத் தட்டியது இதெல்லாம் என்னை உற்சாகப்படுத்தியது. அப்படி சினிமா சினிமா சினிமா என்றே பதிவாகிவட்டதால், சினிமா எனக்கு சுலபமாக இருந்தது.”

திராவிடத் தலைவர்களுடனான உங்கள் தந்தைக்கு இருந்த உறவு பற்றி…
“அது குடும்பமாக இருந்தது. எப்போதும் கொள்கைகளில் உறுதியாக இருந்தார்களே ஒழிய, பழகிய விதங்களில் ஆழமான நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு விடுமுறைக்கும் நாங்கள் ஒவ்வொருத்தர் வீட்டிற்கும் செல்வோம். அவர்களும் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். குடும்பமாக வளர்த்த கொள்கை இது.”
திராவிடத் தலைமைகளுக்கிடையே இருந்த உறவுகள் பற்றிய உங்களது பார்வை..
“இவர்களுடைய உறவு நிச்சயமாகப் போலித்தனமான உறவு இல்லை. தங்களுக்கு ஏதாவது கிடைக்குமா என்று போய் நின்றவர்கள் அல்ல. நம்மால் என்ன செய்ய முடியும்? இந்தக் கட்சிக்கும், கொள்கைக்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் என்ன செய்ய முடியும் என்று தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்களே ஒழிய, அதன் மூலமாக லாபம் பெறுவோம், அதன் மூலமாக தலைவராவோம், அதன் மூலமாக சம்பாதிப்போம் என்ற நோக்கத்தோடு இருந்தவர்கள் அல்ல. எல்லா வீட்டிலேயும் அர்ப்பணிப்போடு இருந்தார்கள். இந்த வேலையை சுப்பையாட்ட கொடுத்தா முடிச்சுட்டு வருவார் என்ற நம்பிக்கை பெரியாருக்கு இருந்தது. அண்ணாவிற்கு இருந்தது. கலைஞருக்கு இருந்தது. கலைஞர் அவர்கள் நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருக்கிறார். தொண்டன் என்றால் அது ராம.சுப்பையா என்று. இன்னும் சொல்லப்போனால், பலனை எதிர்பார்க்காது வேலை செய்தவர் எங்கள் அப்பா. அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால், ‘டாக்டரிடம் போவோமா?’ என்று கேட்டால், ‘இல்ல, கலைஞரைப் பாத்து ரொம்ப நாளாச்சு, போய் கலைஞரைப் பாத்துட்டு வருவோம்’ என்பார். கலைஞர், ‘என்ன ண்ணே வேணும், ஏதுனே வேணும்’ என்று விசாரிப்பார். ‘ஒன்னுமில்ல உங்களப் பாத்துட்டுப் போகத்தான் வந்தேன்’ என்பார். கலைஞர் சிரித்துவிட்டு, ‘இப்படியொரு மனுஷனா’ என்பார். திரும்பி வந்தால் அப்பாவிற்கு காய்ச்சல் சரியாகியிருக்கும். அந்தளவுக்கு ஒரு பாசம்.”

“ஒரு நாள் ரொம்ப சீரியஸாகிவிட்டது. அப்பா இறந்து விடுவார் என்று நினைத்து நாங்களெல்லாம் பயந்துக்கொண்டிருந்தோம். அப்பா எங்களை அழைத்து, ‘நா இப்போ சாக மாட்டேன்’ என்றார். ‘ஏன்’ என்று கேட்டதற்கு, ‘கலைஞர் இப்போ எதிர்க்கட்சித் தலைவராக இருக்கார். கலைஞர் முதலமைச்சராகி வந்து எனக்கு மாலை போடுவாரு. எனக்கு மனசுக்குள்ள அது உறுதியா இருக்கு. அந்த உறுதி நிறைவேறும். அதனால யாரும் பயப்படாதீங்க’ என்றார். அதே மாதிரி கலைஞர் முதலமைச்சரான பிறகு, அப்பா இறக்கிறார். கலைஞர் வந்து மாலை போடுறார். இறந்தபின் முதல் மாலை கலைஞர் போட்டது. அந்தளவு நம்பிக்கையோடு பணியாற்றினார்.”
“என்னுடைய குரு ஏ.சி. திருலோகச்சந்தர். ஏ.வி.எம் ஸ்டூடியோ என்பது பெரிய இன்ஸ்டிட்யூட். அன்றைக்கு இந்த ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் எல்லாம் கிடையாது. அன்றைக்கு சினிமாத்துறையின் பல்கலைக்கழகம் என்றால், அது ஏ.வி.எம் ஸ்டூடியோதான். அங்கிருந்து தயாராகி வந்த நிறைய பேர் தான் திரைத்துறையில் இருக்கிறார்கள். அது நடிகர்களானாலும் சரி, மற்ற கலைஞர்கள் ஆனாலும் சரி. எங்களுக்கு அது தான் பல்கலைக்கழகம். ஏ.வி. மெய்ப்பச் செட்டியார் தான் வேந்தர். அவருடைய பிள்ளைகள் முருகன், குமரன், சரவணன், பாலு சார், வீரப்பன் சார் இவர்களெல்லாம் துணை வேந்தர்கள். அங்கு வராத இயக்குநர்களே கிடையாது. பெரிய பெரிய இயக்குநர்களெல்லாம் வந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் எங்களுக்குக் கிடைத்தப் பேராசிரியர்கள்.
அப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தில் பயின்று, வேலைகளைக் கற்றுக் கொண்டதால் தான் நாங்கள் இன்றைக்கு இவ்வளவு தூரம் நிற்கின்றோம். ஒரு படம், இரண்டு படம், ஐந்து படம் இயக்கியவர்களெல்லாம் காணாமல் போய்விடுகிறார்கள். அதற்குக் காரணம், அந்த அஸ்திவாரம் பலமாக இல்லை. எங்களுக்குக் கிடைத்த அஸ்திவாரம் பலமான அஸ்திவாரம். அதிலும் குறிப்பாக எனக்குக் கிடைத்த ப்ளஸ் பாயிண்ட் என்னை எடிட்டிங்கில் சேர்த்துக் கொண்டது. ‘எங்க வேலை செய்றே?’ என்று கேட்டார். ‘தென்றல் பத்திரிக்கையில’ என்றேன். ‘அப்படியா பத்திரிகையிலயா வேல செய்ற, ஃபில்ம்லயும் அதே மாதிரி எடிட்டிங் இருக்குப்பா. எடிட்டிங் தான் சினிமாவுக்கு ஜங்ஷன். அங்க வேல பழகிட்டா, அப்றம் நீ எந்த டிபார்ட்மென்ட்டுக்கு வேணும்னாலும் போலாம்’ என்றார்.”

தென்றலில் எப்படி இணைந்தீர்கள்?
“அப்பாவும் கண்ணதாசனும் கட்சிக்காரர்கள். நான் சினிமாவில் சேர வேண்டும் என்று அடம்பிடித்தபோது கண்ணதாசனிடம் அபிப்பிராயம் கேட்போம் என்று அப்பா என்னை அழைத்துச் சென்றார். கண்ணதாசனிடம் சென்று, ‘பையன் சினிமாவுல சேரணுங்கிறான், எனக்கு ஒன்னுமே தெரியாது நீ சொல்லு’ என்றார். கண்ணதாசன், ‘பையன் இப்போதான் படிச்சிருக்கான். இன்னும் உலகமே என்னன்னு தெரியாது. அதனால தம்பி என்கிட்ட வேல செய்யட்டும். உலகத்த தெரிஞ்ச பிறகு சினிமாவுக்குப் போகட்டும். அவன் எங்கிட்டேயே இருக்கட்டும். என் வீட்லயே சாப்பிட்டுகிட்டும்’ என்கிறார். கண்ணதாசன் காலத்தில் பிறந்தது எங்களுடையப் பெருமை என்பார்கள். நான் அவர் வீட்டிலேயே சாப்பிட்டு, அவரோடு வாழ்ந்து, குருகுல வாசம் இருந்தேன். அது எனக்குக் கிடைத்த பெருமையிலும் பெருமை. கண்ணதாசன் ஒரு பத்திரிகையாளர். பத்திரிகையைத் தான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். கண்ணதாசன் கவியாக, பேச்சாளராக, எழுத்தாளராக எனக்கு அறிமுகம் ஆனவர். அவருடையப் போக்கில் நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். உலகம் என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொண்டேன். ஆனால், சினிமாவை நான் கற்றுக்கொண்டது ஏ.வி.எம் ஸ்டுடியோவிலும், ஏ.சி. திருலோகச்சந்தரிடமும் தான்.”
“அப்படி நான் எடிட்டிங்கில் வேலை செய்யும்போது, அவருடைய பையன் குமரன் சாரும் எடிட்டிங்கில் அப்பரண்டிஸாக வந்து சேர்ந்தார். செட்டியார் உடனே அவரை டைரக்டர் ஆக்கவில்லை. அவரையும் எடிட்டிங்கில் வேலை செய்ய வைத்தார். அப்போது எங்களுக்குள் ஒரு நட்பு கிடைக்கிறது. குமரன் சாரோட பழகினேன். அப்போது பிள்ளைகளெல்லாம் சேர்ந்து ஒரு படம் எடுப்பது என்று ஒரு முடிவு செய்தார்கள். குமரன், சரவணன், பாலு, வீரப்பன் எல்லாரும் சேர்ந்து தனியாக படம் எடுக்க முடிவு செய்தார்கள். அப்போது குமரன் சாரோடு இருந்த பழக்கத்தின் காரணமாக அவர் என்னை செட்டுக்கு அழைத்தார். இருந்தும் சீஃப் எடிட்டர் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பின்பு குமரன் சார், ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரிடம் சொல்ல, அவர் எடிட்டரிம் சொல்லி நான் செட்டுக்குப் போக வழி செய்தார்.”

“அப்படி நான் செட்டில் போய் வேலைப் பார்த்த முதல் படம் எதுவென்றால், ஒரு நான்கு வயது பையன் காதில் பூ வைத்துக்கொண்டு, ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயேன்னு பாட்டுப் பாடிட்டு வருவானே’ அந்தப்படம். கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த, ‘களத்தூர் கண்ணம்மா’ படம் தான் நான் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்த முதல் படம். அசிஸ்டன்ட் டைரக்டர் என்றால் மூத்த அசிஸ்டன்ட் டைரக்டர் இல்லை, ஆறாவது ஏழாவது அசிஸ்டன்ட் டைரக்டர். அப்படியாகத் தான் செட்டுக்குப் போய் சேர்ந்தேன். எனக்குக் கிடைத்த மற்றொரு பெருமை கமலஹாசனைத் தூக்கி வளர்த்தது. அந்த நன்றியோடு பார்க்கிறான். நானும் நன்றியோடு பார்க்கிறேன்.”
“நான் சினிமாவுக்கு வந்த காலத்தில் ஒரு சில விதிமுறைகள் இருந்தன. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என ஒரு எல்லார்கிட்டயும் ஒரு புரிதல் இருந்ததால் வியாபாரம் செய்ய முடிந்தது. இன்றைக்குப் படம் கூட எடுத்துவிட முடிகிறது. ஆனால் அதை வியாபாரம் செய்ய முடிவதில்லை. அன்றைக்கெல்லாம் லாபம் வந்தாலும் மூன்று பேருக்கும் வரும், நஷ்டம் வந்தாலும் மூன்று பேருக்கும் வரும் என்பது போன்ற ஒரு கூட்டு முயற்சி இருந்தது. இப்போது அதெல்லாம் இல்லாத காரணத்தால் தயாரிப்பாளரே எல்லாவற்றையும் தலையில் போட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று.”
“களத்தூர் கண்ணம்மாவிற்கு பிறகு அங்கு வந்த எல்லா இயக்குநர்களிடமும் இணைந்து வேலை செய்தேன். நான் ஸ்டுடியோ ஸ்டாஃப் என்பதால் எல்லாரிடமும் வேலை செய்தேன். ஒரு நாள் சரவணன் சார் அழைத்து, ‘முத்துராம், இப்படி ஒவ்வொரு டைரக்டர்கிட்டேயும் போய் வேலை செய்யாதீங்க. வீரத் திருமகன்ற படத்த இயக்குறதுக்காக ஏ.சி.திருலோகச்சந்தர்ன்னு ஒருத்தர் வர்றாரு. அவர்ட்ட போய் இனி வேல செய்ங்க’ என்று என் கையைப் பிடித்து ஒப்படைத்தது சரவணன் சார் தான். என்னை செட்டுக்கு அழைத்துச் சென்றது குமரன் சார். என்னை திருலோகச்சந்தரிடம் ஒப்படைத்தது சரவணன் சார். அதற்குப் பிறகு திருலோகச்சந்தரிடமே வேலை செய்தேன்.

அவர் கிட்டத்தட்ட 10-15 படங்கள் இயக்கினார். அதில் எல்லாவற்றிலும் நான் தான் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்தேன். நான் தொழிலை முழுமையாகக் கற்றுக்கொண்டதற்கும், தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டதற்கும் ஏ.சி. திருலோகச்சந்தர் தான் காரணம். எனவே தான் இப்போதும் சொல்ல ஆசைப்படுகிறேன், எனக்கு குரு ஏ.சி. திருலோகச்சந்தர் தான் என்று.”
“எடிட்டிங்ல நான் அப்பரண்டிஸாக இருக்கும்போது எனக்கு கொடுத்த ஆரம்ப சம்பளம் அறுபது ரூபாய் தான். நான் அசிஸ்டன்ட் டைரக்டராக மாறிய பிறகு மாதாமாதம் ஐம்பது ரூபாய், இருபத்தைந்து ரூபாய் கூட்டித் தருவார்கள். எனக்குக் கல்யாணம் ஆன பிறகு, ஒரே அடியாக நூறு ரூபாய் ஏற்றிக் கொடுத்தார் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். கடைசியாக, ஏ.வி.எம் ஸ்டுடியோவைவிட்டு வெளியே வரும் எனக்குக் கொடுத்த சம்பளம், எழுநூறு ரூபாய். சினிமாவில் மூன்று மாதம் வேலையிருக்கும், சில மாதங்கள் வேலையிருக்காது. ஆனாலும், எங்களுக்கு அந்தச் சம்பளம் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.” என்று அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.