சென்னை: கேப்டன் மோகன் ராம் எழுதிய ‘கேப்டன் இன் கார்ப்பரேட் வொண்டர்லேண்ட்’ (A Captain in Corporate Wonderland) புத்தகம் நேற்றுமுன்தினம் சென்னையில் வெளியிடப்பட்டது.
கேப்டன் மோகன் ராம் இந்தியகடற்படையில், போர்க் கப்பல்வடிவமைப்பாளராக பணியாற்றியவர். இந்தியாவின் முதல் சொந்த போர்க் கப்பலான ஐஎன்ஸ் கோதாவரி, இவர் தலைமையில் வடிவமைக்கப்பட்டதாகும். கடற்படையைத் தொடர்ந்து, முகுந்த் ஸ்டீல் நிறுவனத்தில் அவர் இணைந்தார். அங்கு 5 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு 1989-ம் ஆண்டு டிவிஎஸ் சுசூகி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். கடற்படையில் பணியாற்றிவிட்டு, எந்த முன் அனுபவமும் இல்லாத தனியார் துறைக்குமாறி அந்நிறுவனங்களை வளர்த்தெடுத்த அனுபவங்களை ‘கேப்டன் இன் கார்ப்பரேட் வொண்டர்லேண்ட்’ புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகத்தை டிவிஎஸ் லூகாஸ் தலைவர் பாலாஜி வெளியிட்டார். அட்மிரல் மோகன் ராமன், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டிஎஸ் கிருஷ்ணமூர்த்தி, டிவிஎஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாலிட்டி அண்ட் லீடர்ஷிப் அமைப்பின் இயக்குநர் கோவைச் செல்வன் ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நூல் குறித்து மோகன் ராம் பேசுகையில், “கடற்படையில் பணியாற்றிய நான் உருக்கு மற்றும்வாகன உற்பத்தி ஆகிய இரு வெவ்வேறு துறைகளில் இரண்டு நிறுவனங்களில் இணைந்து அந்நிறுவனங்களை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றுள்ளேன். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அப்போது எனக்கு அத்துறைகளைப் பற்றி எந்தப் புரிதலும் கிடையாது. பிறகு எப்படி நான் அந்தநிறுவனங்களை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றேன்? அந்தத் துறைகளை முன் தீர்மானம் இல்லாமல் அணுகியதால், என்னால் புதிய கோணங்களில் சிந்திக்க முடிந்தது. நம்மிடம் உள்ள பெரியசிக்கல் நம் திறமையை நாம் குறைவாக மதிப்பிட்டுக் கொள்வதுதான்.கடினம் என்ற மனநிலையில் எந்தப் பணியையும் தொடங்கக்கூடாது. ஒவ்வொரு வேலையிலும் சவால்கள் உண்டு. அந்த சவால்களைஎப்படி நாம் எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே நம் ஆளுமையைதீர்மானிக்கிறது” என்று அவர் கூறினார்.