இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை: மத்திய அரசு தீர்வு காண முத்தரசன் கோரிக்கை

சென்னை: கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தும் அட்டூழியமும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, “கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தும் அட்டூழியமும் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் விளைவாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் இலங்கை நீதிமன்றம் மூன்று மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்துள்ளது. இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக மீனவர் சமூகத்தில் கடுமையான கொந்தளிப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு, ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து நம்பிக்கை அளிக்கும் செய்தி ஏதும் கிடைக்காத நிலையில் நாளையும், நாளை மறுதினமும் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் திருவிழாவை புறக்கணிக்க வேண்டிய தீவிர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் உணர்வை பிரதிபலிக்கும் முறையிலும், இலங்கை அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் முறையிலும், மீனவர்கள் போராட்டத்துக்கு, அருட்திரு பங்கு தந்தையும் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் ஒட்டு மொத்தமாக போராட்டக் களம் இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசின் கவனத்துக்கு சுட்டிக் காட்டுவதுடன் உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கையில் சிறை தண்டனை பெற்றுள்ள மீனவர்கள் உட்பட இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுவிடுத்து, நாடு திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. வாழ்வுரிமை பாதுகாப்புக்கான மீனவர்கள் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் ஆதரித்து பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.