புதுடெல்லி: டெல்லி மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. அவர் பிப்.26-ம் தேதி ஆஜராகும்படி தெரிவித்துள்ளது.
இந்த வழக்குத் தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய 6 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் நிராகரித்திருந்தார். பிப்.19-ம் தேதி 6-வது சம்மனை நிராகரித்த கேஜ்ரிவால், “தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அமலாக்கத் துறை காத்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதேபோல், “அமலாக்கத் துறையே நீதிமன்றத்தை நாடியுள்ளதால் மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக நீதிமன்றத்தின் முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டும்" என்று ஆம் ஆத்மி கட்சியும் தெரிவித்திருந்தது.