பிரிண்ட் மூலம் மீண்டும் திரையிடல் : ரசிகர்கள் வரவேற்பு

ரீ-ரிலீஸ் கலாச்சாரம் மீண்டும் தமிழ் சினிமாவில் எட்டிப் பார்த்துள்ளது. டிஜிட்டல் திரையிடல் வருவதற்கு முன்பாக ரீ-ரிலீஸ் என்பது ஒரு பெரிய மார்க்கெட்டாக இருந்தது.

முக்கிய நகரங்களில் ஓடி முடித்த படங்களின் பிரிண்ட்களை வைத்து, அடுத்து சிறிய நகரங்களில், பின்னர் சிறிய ஊர்களில் அப்படங்களைத் திரையிடுவார்கள். அது போல பல பழைய சூப்பர் ஹிட் படங்களையும் டூரிங் டாக்கீஸ் எனப்படும் டென்ட் கொட்டா தியேட்டர்களிலும் திரையிட்ட காலம் ஒன்று இருந்தது.

டிஜிட்டல் வந்த பிறகு அந்த பழைய படங்களின் ரீ-ரிலீஸ் என்பது காணாமல் போனது. தற்போது அதை மீட்டெடுத்து வந்துள்ளார்கள். கடந்த சில வருடங்களில் சில முக்கிய படங்களை மட்டுமே டிஜிட்டலுக்கு மாற்றி, அவற்றின் ஆடியோ தரத்தையும் உயர்த்தி வெளியிட்டார்கள். அது போல பல படங்களை டிஜிட்டலுக்கு மாற்றித் திரையிட யாரும் தயாராக இல்லை.

இந்நிலையில் 90களில் வந்த சில படங்களை இன்றைய 2 கே கிட்ஸ்களும் ரசிக்கும் விதத்தில் மீண்டும் பிரிண்ட் மூலம் திரையிடுவதை சென்னையில் உள்ள கமலா தியேட்டர் ஆரம்பித்துள்ளது. பிப்ரவரி 23ம் தேதி விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' அஜித் நடித்த 'வாலி' படங்களை பிரிண்ட் மூலம் ரீ-ரிலீஸ் செய்தார்கள்.

அன்றைய தினம் வெளிவந்த புதிய படங்களுக்கு 20 பேர் மட்டுமே வந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் ஏறக்குறைய ஹவுஸ் புல்லாகி ஓடியுள்ளன. கடந்த இரண்டு நாட்களாகவும் இதே நிலைதான் இருந்துள்ளது. இவற்றிற்கான கட்டணம் வெறும் ரூ.69 என்பதும் வரவேற்புக்கு ஒரு காரணம்.

புதிய படங்களைக் காட்டிலும் பழைய படங்களுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருப்பது மற்ற தியேட்டர்காரர்களையும் யோசிக்க வைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.