'விளவங்கோடு இடைத்தேர்தலில் நீங்கள் நினைப்பது நடக்கும்!' – மகிளா காங்கிரஸ் மாநாட்டில் செல்வபெருந்தகை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் சார்பில் உலக மகளிரணி மாநாடு நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேசுகையில், “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திரா காந்தி, விஞ்ஞான யுகபுரட்சி நாயகன் ராஜிவ் காந்தி ஆகியோர் இல்லை என்றால் இந்தியாவின் நிலை என்னவாக இருக்கும் என நீங்கள் நினைத்துபாருங்கள். மணிப்பூர் போராட்டம், குமரியில் நடந்த தோள்ச்சீலை போராட்டம் ஆகியவை வரலாற்றில் முக்கியமாக நடந்த பெண்களுக்கான போராட்டங்களாகும். 40 ஆண்டுகள் தோள்ச்சீலை போராட்டம் நடந்தது. 40 ஆண்டுகள் போராடி பழைமை வாதிகளை வென்று புதுமை புகுத்தியது கன்னியாகுமரி மாவட்டம். மணிப்பூரில் ராணுவத்துக்கு எதிராக பெண்கள் நிர்வாணமாக போராடினார்கள். மணிப்பூரில் தங்கம் மனோரமா என்ற பெண் வன்கொடுமை செய்யப்பட்டார். தைரியம் இருந்தால் எங்களை தொட்டுப்பாருங்கள் என பெண்கள் நிர்வாண போராட்டம் நடத்தினார்கள்.

கேலோ இந்தியா போட்டியில் யோகாவில் தங்கம் வென்ற தமிழக அணியைச் சேர்ந்த நவ்யாவுக்கு மாநாட்டு மேடையில் பரிசு வழங்கப்பட்டது

ராகுல் காந்தியால்தான் பெண்களுக்கு உரிமையை பெற்றுத்தர முடியும். சதி என்ற உடன்கட்டை ஏறுதலை கொண்டுவந்த படுபாவிகள் யார் என்று உணர்ந்துகொள்ளுங்கள். அவர்களின் வாரிசுகள்தான் இப்போது ஒன்பதே முக்கால் ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பா.ஜ.க-வுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டுமா. காந்தி தலைவராக இருந்த காங்கிரஸ் உடன்கட்டை ஏறுவதை எதிர்த்து பெரிய போராட்டத்தை முன்வைத்தது. பிரிட்டீஷார் உடனடியாக உடன்கட்டை ஏறுவதும், அதை கட்டாயப்படுத்துவதும் குற்றம் என சட்டம் கொண்டுவந்தார்கள்.

பெண்கள் பச்சை மையில் கையெழுத்திடவேண்டும் என பஞ்சாயத்து ராஜ் கொண்டுவந்து பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொனடுவந்தவர் ராஜீவ் காந்தி. ஆயிரம் ஆண்டுகள் ஆன சங்க இலக்கியத்தில் உலகத்துக்கு ஒரு செய்தி சொல்லுகிறார் ஒரு பெண். தனியாக நின்ற பெண் கடலைபார்த்து, வானத்தை பார்த்து பசி, பகை, நோய், பிணி இல்லாத உலகம் வேண்டும் என கேட்கிறார். இந்த கருத்தை உலகுக்கு சங்க இலக்கியம் மூலம் அளித்தவர் ஒரு பெண். ஆண்கள் வீட்டு வேலைகளை செய்வார்கள், பெண்கள் வேலைக்குச் செல்வார்கள் என்ற இந்த தகவல் சங்க இலக்கியத்தில் உள்ளது. ஆனால், இந்துத்துவாவை புகுத்தி கணவன் இறந்தால் பெண்கள் தீக்குளிக்க வேண்டும், பூ வைக்கக்கூடாது, பொட்டு வைக்கக்கூடாது, தரையில் படுக்க வேண்டும் என மாற்றினார்கள். இதெல்லாம் நாக்பூரை மையமாகக்கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தீட்டிய திட்டம்.

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை பேச்சு

ராமாயணத்தில் ராமன் சீதையை அக்னி பிரவேசம் செய்யச்சொன்னார். சீதை ராமனை மன்னித்துவிட்டார். நளன் தமயந்தியை நடுக்காட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். தமயந்தி நளனை மன்னித்துவிட்டார். கோவலன் கண்ணகியை ஏமாற்றினார், கண்ணகி மன்னித்தார். பாஞ்சாலி துகிலுரியப்பட்டார், அடகுவைத்த தர்மனை பாஞ்சாலி மன்னித்தார். ஆனால் ஆண்கள் பெண்களை மன்னிக்க மாட்டார்கள். வடமாநிலத்தில் காளியை தெய்வமாக கொண்டாடுகிறார்கள். ஏனென்றால் அவர் அநீதியை எதிர்த்து கொலை செய்தாராம். அநீதியை எதிர்த்து போராடினால்தான் பெண்களை மதிப்பார்கள். இப்போது இடைத்தேர்தல் வரப்போகிறது. அதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது விளவங்கோடு தொகுதியில் நடக்கும்” என்றார்.

நிகழ்ச்சியில் தேசிய மகிளா காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா பேசுகையில், “விஜய் வசந்த் மீண்டும் கன்னியாகுமரியில் வென்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவேண்டும். வரும் இடைத்தேர்தலில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இடைத்தேர்தலில் மட்டும் அல்ல, அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் மகளிரணியினர் வெற்றிபெறுவார்கள். அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். 33 சதவீதம் பெண்களின் இட ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துவிட்டார்கள். 2026-ல் தமிழக சட்டசபையில் 70 பெண் எம்.எல்.ஏ-க்கள் நம் கட்சி சார்பில் இருப்பார்கள். பெண்கள் பஞ்சாயத்து தலைவர், மேயர் ஆனீர்கள். வரும் சட்டசபை தேர்தலில் வென்று, துணை முதல்வராக, ஏன் முதல்வராக கூட பெண்கள் வரவேண்டும். ராகுல் பாரத் ஜோடோ யாத்திரையை குமரியில் தொடங்கினார். அதை வெற்றிக்கரமாக மாற்றிய மகளிரணியினருக்கு நன்றி. 2024-ல் திமுக கூட்டணியில் அதிக இடங்களை வென்று மத்தியில் ஆட்சி அமைப்போம்” என்றார்.

மகிளா காங்கிரஸ் தேசிய தலைவி அல்கா லம்பா-வுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி பா.ஜ.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். விளவங்கோடு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வர உள்ளது. எனவே, மகளிரணி மாநாட்டில் மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறிய கருத்தின்படி விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பெண் வேட்பாளரை களம் இறக்க உள்ளதாகவும். அதைத்தான் செல்வபெருந்தகை உறுதிப்பட கூறியதாகவும் கட்சி நிர்வாகிகள் கூறிவருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.