நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், பல மாநிலங்களுக்கும் சென்று பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றுவருகிறார். அந்த வகையில், தமிழ்நாட்டுக்கு அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டுவருகிறார் பிரதமர் மோடி.

அப்படியே, தேர்தல் பிரசாரத்தையும் அவர் மேற்கொண்டு வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.
அடுத்ததாக, ஒரு நாள் பயணமாக மார்ச் 4-ல் சென்னை வந்த பிரதமர் மோடி, சென்னைக்கு அருகே கல்பாக்கத்தில் நாட்டின் முதல் அதிவேக ஈனுலை திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தார். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முன்மாதிரி வேக 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலை மையப்பகுதியில், கோர் லோடிங் தொடக்கப்பணிகளை மோடி பார்வையிட்டார்.

இந்த ஈனுலை செயல்பாட்டுக்கு வந்தால், ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக வணிக ரீதியில் இயங்கக்கூடிய விரைவு ஈனுலை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்றும், 500 மெகாவாட் திறன்கொண்ட வேக ஈனுலையில் கோர் லோடிங் பணி நிறைவடைந்த பிறகு மின் உற்பத்தி தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
‘இந்த வேக ஈனுலை மேம்பட்ட மூன்றாம் தலைமுறை உலை. அவசர நிலை ஏற்பட்டால், ஆலையை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் மூடுவதை உறுதிசெய்யக்கூடிய பாதுகாப்பு வசதிகள் இதில் இருக்கின்றன. முதல் கட்டத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருளைப் பயன்படுத்துவதால், அணுக்கழிவுகள் உருவாவது கணிசமாகக் குறையும்’ என்று மத்திய அரசு கூறுகிறது.

‘1985 முதல் வேக ஈனுலை சோதனையை இந்தியா மேற்கொண்டுவருகிறது. கடந்த ஆண்டு, 40 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையை 120 நாள்கள் சோதனை முயற்சியில் இயக்கி, 21.5 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது’ என்று மத்திய அரசின் தரப்பில் தெரிவித்திருக்கிறது.
கல்பாக்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. அது குறித்து கேள்வி எழுந்த நிலையில், கடலூரில் செய்தியாளர்களை தி.மு.க-வின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சந்தித்தார். அவரிடம், கல்பாக்கம் நிகழ்ச்சியில் ஏன் முதல்வர் பங்கேற்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ‘கல்பாக்கம் ஈனுலை தமிழ் மக்கள் விருப்பத்துக்கு எதிரான மத்திய அரசின் திட்டம். எனவே, அந்த விழாவில் முதல்வர் கலந்துகொள்ளவில்லை. தமிழ்நாட்டை பாழ்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன், இத்தகைய திட்டங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது’ என்று பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, ‘குஜாராத்திலோ, உத்தரப் பிரதேசத்திலோ ஈனுலையை அமைக்காமல் தமிழ்நாட்டில் அதைக் கொண்டுவர என்ன காரணம்?’ என்ற கேள்வியை எழுப்பினார்.
மேலும், `கல்பாக்கம் பகுதியில் அதிகமான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மகாபலிபுரத்தில் மீன் சாப்பிட மாட்டார்கள். காரணம் கல்பாக்கத்தில் இருந்து வெளியாகும் அணுக்கதிர்கள், கடலில் கலந்து மீன்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தால்தான். அனைத்து விதத்திலும் தமிழ்நாட்டை அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம்’ என்றார்.
ஏற்கெனவே, கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் அந்தப் பகுதி மக்களின் உடல் ஆரோக்கியம் சீர்கெட்டிருப்பதாகவும், பல்வேறு நோய்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டிவருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், `நிரந்தர அணுக்கழிவு மையம் வைப்பதற்கான தொழில்நுட்பத்தை இதுவரை பெற்றிடாத இந்தியா, தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அணுவுலைகளை அமைப்பது, நேரடியாகத் தமிழர்கள் மீது மத்திய அரசு தொடுக்கும் சூழலியல் போர்’ என்று கொந்தளித்திருக்கிறார்.

இந்த நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் அமைக்கப்படும் ஈனுலை திட்டத்தால், கல்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் பெருமளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் அச்சம் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க-வும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து ம.தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிடம் பேசினோம். மாமல்லபுரத்தை பூர்விகமாகக் கொண்டவரான இவர், இந்த அதிவேக ஈனுலை திட்டத்துக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி, அதற்காக வழக்குகளையும் சந்திப்பவர். அவரிடம் பேசியபோது, “வல்லரசு நாடுகளால் கைவிடப்பட்ட அதிவேக ஈனுலைத் திட்டத்தை கல்பாக்கத்துக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய திட்டம் என்பதால், இதை எதிர்த்து போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இந்த அதிவேக ஈனுலைத் திட்டம் 50 ஆண்டுகளுக்குக்கூட பாதுகாப்பாக இயங்கலாம். ஆனால், அந்த அணுக்கழிவுகள் 50,000 ஆண்டுகளுக்கு கண்காணித்துப் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால், அணுக்கழிவுகளால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கெனவே, கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் நிறைய சுற்றுச்சூழல் பாதிப்புகளை மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதிகள் சந்தித்துவருகின்றன. இந்தப் பகுதியில் கடல் நண்டு, இறால், முகத்துவார மீன்கள் ஆகியவற்றில் அணுக்கதிர் வீச்சின் தாக்கம் இருப்பதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள். எனவே, இங்கு கடல் உணவுகளை உண்பதற்கு சுற்றுலா பயணிகள் அச்சப்படும் நிலை இருக்கிறது. ஒரு காலத்தில் மாமல்லபுரத்தில் எங்கு திரும்பினாலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக நடமாடுவார்கள்.
இப்போது, இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதற்கு, இந்தப் பிரச்னைதான் காரணம். கல்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலரும் தோல்நோய்கள், தைராய்டு பிரச்னைகள், புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும், மருத்துவர்களும் ஆதாரங்களுடன் சொல்லிவருகிறார்கள். அந்த குற்றச்சாட்டை எளிதாக மறுத்துவிட முடியாது” என்கிறார் மல்லை சத்யா.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY