புதுக்கோட்டைக்கு ஒரு நிகழ்ச்சிகாக வருகை தந்த கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“யாருக்கு நன்கொடை கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் தேர்தல் பத்திரம் பெறுவது தவறானது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஸ்டேட் பேங் கால அவகாசம் பெற்றது வேடிக்கையாக உள்ளது. அவர்களின் செயல் கண்டிக்கத்தக்கது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை போராட்டம் நடைபெற உள்ளது. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. இருக்கிற 39 தொகுதியைத்தான் தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க வேண்டியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மீண்டும் பூமிப் பூஜை போடும் வைபோகத்தை மட்டும் செய்துள்ளனர். மற்றபடி அவர்கள் பணிகளைத் தொடங்கவில்லை. வருகின்ற தேர்தலை எதிர்கொள்ள எனது தந்தையின் தயவு இன்னும் எனக்கு தேவைப்படுகிறது. அதே வேளையில், கட்சி பலம், கூட்டணி பலம்தான் முக்கியம். எம்.பி, எம்.எல்.ஏ பெயர்களைவிட கட்சியின் சின்னம்தான் மக்களுக்கு தெரியும்.

எனவே, கட்சி பலத்தையும், கூட்டணி பலத்தையும் நம்பி தேர்தலை எதிர்கொள்கிறேன். விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமான மத்திய அரசு ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய தேர்தல் பரப்புரையாக இருக்கும். டி.டி.வி.தினகரன் எனக்கு நல்ல நண்பர் தான். மன்னார்குடியில் இருந்து டி.டி.வி.தினகரன் சிவகங்கை தொகுதியில் போட்டியிட வந்தால், செட்டிநாட்டு வழக்கபடி அவருக்கு 3 வார காலம் நல்ல விருந்தோம்பல் செய்து மீண்டும் அவரை மன்னார்குடிக்கே வழி அனுப்பிவைப்போம். எங்களுடைய தேர்தல் பிரசாரமாக விலைவாசி உயர்வு, மத்திய அரசு தமிழகத்தை நிதி கொடுக்காமல் வஞ்சித்தது உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இடம்பெறும்” என்றார்.