திரையரங்குகளில் மட்டுமின்றி பல்வேறு ஓ.டி.டி தளங்களிலும் நேரடியாகப் படங்கள் வெளியாகி வருகின்றன. இது சிறிய பட்ஜெட் படங்களுக்கும், வணிக சமரசமின்றி எடுக்கப்படும் யதார்த்தப் படைப்புகளுக்கும் பெரும் வரமாக இருந்து வருகிறது.

(Representational image)
இது தவிர தற்போதைய டிரெண்டு படி, திரையரங்குகளில் வெளியான படங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு ஓ.டி.டி தளங்களில் வெளியாகும். திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு முன்போ அல்லது பின்போ இந்த ஓ.டி.டி பிசினஸ் ஒப்பந்தம் நிகழும். ரசிகர்கள் பலரும் ஓ.டி.டி வெளியீட்டிற்காகக் காத்திருந்து சந்தா செலுத்தி, படங்களைப் பார்த்து மகிழ்கின்றனர். தற்போது கேரள அரசு நல்ல திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் `சி ஸ்பேஸ்’ என்ற ஓ.டி.டி தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஒரு மாநில அரசே முன் வந்து தொடங்கும் முதல் ஓ.டி.டி தளம் இந்த ‘சி ஸ்பேஸ்’. நல்ல திரைப்படங்கள், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஓ.டி.டி தளத்தை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். நல்ல கருத்துகளையுடைய திரைப்படங்கள் பல, திரையரங்குகளில் போதிய கவனம் பெற்றிருக்காது. அப்படியான திரைப்படங்களைப் பெரியளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் இந்த ‘சி ஸ்பெஸ்’ ஓ.டி.டி தளத்தை கேரள மாநில அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதுமட்டுமின்றி சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட திரைப்படங்களை இந்த ஓ.டி.டி தளத்தில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த ஒ.டி.டி தளத்தை கேரள மாநிலத் திரைப்பட நல வாரியம் முழுமையாகப் பார்த்துக் கொள்ளும். இந்த ‘சி ஸ்பேஸ்’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் திரைப்படங்களின் கன்டன்ட் தரத்தைப் பார்த்துக்கொள்வதற்கு 60 நபர்களை இந்த நல வாரியக் குழு தேர்ந்தெடுத்திருக்கிறது. முதற்கட்டமாக 35 திரைப்படங்களையும், ஆறு ஆவணப்படங்களையும், ஒரு குறும்படத்தையும் இந்த ஓ.டி.டி தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். ‘Pay-per view’ என்கிற அடிப்படையில் 75 ரூபாயை வசூலிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதன்படி அந்தப் படங்களுக்கு எனக் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கு அதன் தயாரிப்பாளர்களைச் சென்றடையும் என்று தெரிகிறது.
கேரள அரசின் இந்த முயற்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கமென்ட்டில் சொல்லுங்கள்.