அமெரிக்கா: விபத்தில் சிக்கிய தேசிய காவல் படை ஹெலிகாப்டர்; 2 பேர் பலி

நியூயார்க்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஸ்டார் கவுன்டி பகுதியில் லா குருல்லா என்ற சிறிய நகரத்தில் மெக்சிகோ எல்லையருகே தேசிய காவல் படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், தேசிய காவல் படை வீரர் மற்றும் எல்லை ரோந்து பணி ஏஜென்டுகள் 3 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது, ரியோ கிராண்ட் ஆற்று பகுதியருகே அவர்களின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயமடைந்தனர். இதுபற்றி டெக்சாஸ் மாகாணத்தின் பொது பாதுகாப்பு துறைக்கான மண்டல இயக்குநர் விக்டர் எஸ்கலான் கூறும்போது, எல்லை ரோந்து பணியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ஈடுபட்டு வந்தது என உறுதிப்படுத்தி உள்ளார்.

எனினும், ஆபரேசன் லோன் ஸ்டார் நடவடிக்கையில் அந்த ஹெலிகாப்டர் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்து உள்ளார். மெக்சிகோ எல்லை பகுதியில் இந்த விபத்து நடந்தபோது, அதனை போதை பொருள் கும்பலை சேர்ந்த உறுப்பினர்கள், ஆளில்லா விமானங்களின் உதவியுடன் பார்த்துள்ளனர்.

அவர்கள் கேமிரா உதவியுடன் உற்று பார்த்து விட்டு, சிரித்து உள்ளனர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி 23-ந்தேதி மிஸ்ஸிஸிப்பி பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியதில், தேசிய காவல் படை வீரர்கள் 2 பேர் பலியானார்கள். இதேபோன்று, கடந்த பிப்ரவரி 12-ந்தேதி உதா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கொண்டதில், தேசிய காவல் படை வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

இந்த இரண்டு சம்பவங்களிலும், ஏ.எச்.-64 ரக ஹெலிகாப்டர்களே விபத்தில் சிக்கின. கடந்த பிப்ரவரி 6-ந்தேதி, அமெரிக்க கடற்படையை சேர்ந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சான் டீகோ பகுதியில் மலைப்பாங்கான இடத்தில் புயல் வீசிய சூழலில் சிக்கி கொண்டதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். ஒரே மாதத்தில் இதுபோன்று 3 ராணுவ ஹெலிகாப்டர் விபத்து சம்பவங்கள் நடந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.