போலீஸ் தாக்கியதில், வேன் ஓட்டுநர் உயிரிழப்பா? – உறவினர்கள் சாலைமறியல்; 3 காவலர்கள்மீது வழக்கு பதிவு!

சங்கரன்கோவிலில் போலீஸ் தாக்கியதில், வேன் ஓட்டுநர் உயிரிழந்ததாகக் கூறி, கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 37). வேன் ஓட்டுநரான முருகன், ஆன்மிக பயணமாக அச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்களை பஞ்ச ஸ்தலங்களில் ஒன்றான சங்கரன்கோவிலுக்கு வேனில் அழைத்துச் சென்றுள்ளார். அவர், சங்கரன்கோவில் நகர் பிரதான சாலையில் வந்தபோது நெருக்கடி காரணமாக அங்கு நின்றுகொண்டிருந்த ஆட்டோமீது, அவரின் வேன் மோதியதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், வேன் ஓட்டுநர் முருகனை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

உயிரிழப்பு

இதையடுத்து முருகனால், வேன் ஓட்ட முடியவில்லை. எனவே வேனில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு, மற்றொரு ஓட்டுநர் மூலமாக சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்திற்கு முருகனை, விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தொடர்ச்சியாக, முருகன் மயக்க நிலையில் இருந்ததால் பதற்றமடைந்த போலீஸார், அருகே‌ உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார். இதையடுத்து சத்தமில்லாமல், அவரின் உடலை வேனுக்கு எடுத்துச்சென்ற போலீஸார், வேனுக்குள் கிடத்தியபடி முருகனின் உடலை போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் விசாரணைக்காக முருகனை போலீஸ் அழைத்துச் சென்ற தகவலறிந்து காவல் நிலையம் வந்த அவரின் உறவினர்கள், வேனில் அவர் இறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, போலீஸ் தாக்கியதில்தான் முருகன் உயிரிழந்துவிட்டார், அவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, முருகனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து நள்ளிரவில் திடீரென சாலைமறியலிலும் ஈடுபட்டதால் ராஜபாளையம்-சங்கரன்கோயில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

பொதுமக்கள் போராட்டம் காரணமாக, ராஜபாளையம்- சங்கரன்கோவில் மார்க்க வாகனங்கள் அனைத்தும் பருவக்குடி விலக்கு வழியாக மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்‌. விடிய, விடிய நடைபெற்ற இந்த சமாதான பேச்சுவார்த்தையில், முருகனை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து முருகனின் உறவினர் சங்கர்குமார் (30) என்பவர் கொடுத்த புகாரின் பேரில், முருகனை தாக்கியதாக அடையாளம் தெரியாத 3 போலீஸார் மீது சங்கரன்கோவில் நகர காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

இதைத்தொடர்ந்து முருகனின் உடல் உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உயிரிழந்த வேன் ஓட்டுநர் முருகனுக்கு, மீனா என்கிற மனைவியும் 3 பிள்ளைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.