பொழுதுபோக்கை தாண்டி திரைப்படங்கள் மக்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்துள்ளது. எளிதாக மக்களிடம் திரைப்படங்கள் சென்று சேர்வதால் அது மக்களிடையே ஏற்படுத்தும் தாக்கமும் அதிகம். அந்தவகையில் சிறப்பான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்கிறது.
சமீபத்தில் 2014-2015ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் மொத்தம் 39 விருதுகள் வழங்கப்பட்டன.

அதில் பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படம் என `36 வயதினிலே’ திரைப்படம் சிறப்பு பரிசுக்கு தேர்வாகி இருந்தது. அதோடு இப்படத்திற்கு மொத்தமாக 7 விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த நடிகை ஜோதிகா, சிறந்த நகைச்சுவை நடிகை தேவதர்ஷினி, சிறந்த பாடலாசிரியர் விவேக், சிறந்த பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர், சிறந்த ஒப்பனை கலைஞர் சபரி கிரீஷன், சிறந்த பின்னணி குரல் கௌதம் குமார் என படத்தில் சிறப்பாக பங்காற்றிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ஜோதிகா கூறுகையில், “36 வயதினிலே படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் ரொம்ப ஸ்பெஷலான படம்.
இந்த படத்தை பார்த்த நிறைய பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததாக எனக்கு மெசேஜ் அனுப்பினார்கள். மாடித்தோட்டம் அமைத்ததாகவும் சொன்னார்கள். இந்த படம் நல்ல விளைவை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்கு எப்போது அவார்டு கிடைத்தாலும் சந்தோஷம்தான்’’ என்று கூறினார்.

2015-ல் ரோசன் ஆண்ட்ருஸ் இயக்கத்திலும், சூர்யா தயாரிப்பிலும் வெளிவந்த திரைப்படம் `36 வயதினிலே’. பல கனவுகளோடு தொடங்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கை, குடும்பம் என்றான பின் எப்படி மழுங்கடிப்படுகிறது, தனது கனவுகளை மீட்டெடுக்க அப்பெண் தனது 36-வது வயதில் என்ன செய்கிறார் என்பதைக் களமாக வைத்து வெளிவந்த படம். `வாடி ராசாத்தி’ என்ற குரலோடு ஒட்டுமொத்த பெண்களுக்கான குரலாகவும் ஒலித்தது இப்படம்.