மேற்குவங்கம் – கேரளா: `இந்தியா’ கூட்டணியில் இருந்தும் இல்லாத நிலையே – களம் யாருக்கு?!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் தேசிய அளவில் 28 கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கியிருக்கின்றன. கூட்டணி தொடங்கிய சில மாதங்களில் அதன் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டாலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் ‘இந்தியா’ கூட்டணி மீண்டும் வலுப்பெற்றிருக்கிறது.

ராகுல் காந்தி, கெஜ்ரிவால்

டெல்லியில் ஆம் ஆத்மிக்கும் காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு இரு கட்சிகளுக்கும் இடையே சுமூகமாக தொகுதி உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.

அதேபோல, உ.பி-யில் காங்கிரஸுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் கூட்டணி உருவாவதில் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கும் இந்த இரு கட்சிகளுக்கு இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டது. உ.பி-யில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின்போது, அதில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டதும், அங்கு பெரும் கூட்டம் திரண்டதும், ‘இந்தியா’ கூட்டணி மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

பினராயி விஜயன்

தற்போது, ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தும் இல்லாத மாநிலங்களாக கேரளாவும், மேற்கு வங்கமும் இருக்கின்றன.

கேரளாவைப் பொறுத்தவரையில், சி.பி.எம்., காங்கிரஸ் ஆகிய இரண்டு மட்டுமே பெரிய கட்சிகள். இந்த இரு கட்சிகளும்தான், கேரளாவை மாறி மாறி ஆட்சிசெய்துவருகின்றன. அப்படியிருக்கும்போது, கேரளாவில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களும் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை.

கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர்களில் ஒருவரான ஆனி ராஜாவுக்கும் இடையேதான் போட்டியே. எனவே, கேரளாவின் அரசியல் சூழல் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

மம்தா பானர்ஜி

ஆனால், மேற்கு வங்கத்தில் ‘இந்தியா’ கூட்டணி அடி வாங்கியதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், ‘இந்தியா’ கூட்டணி உருவாவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் முதல்வர் மம்தா பானர்ஜி. அவரின் ஆட்சியும், அவரது கட்சியும் பா.ஜ.க-வால் கடும் சவால்களை எதிர்கொண்டுவருகிறது. எனவே, பா.ஜ.க-வை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்றுதான் எதிர்க்கட்சிகளை அவர் ஒன்றிணைத்தார். ‘இந்தியா’ என்று கூட்டணியின் பெயரை முன்மொழிந்தவர்களில் முக்கியமானவர் மம்தா பானர்ஜிதான்.

அப்படியிருக்கும்போது, காங்கிரஸுக்கு கூடுதலாக ஒரு தொகுதியைக்கூட விட்டுத்தர அவரால் முடியவில்லை. அதுதான் காங்கிரஸுடன் கூட்டணி சேர முடியாமல் போனது.

மல்லிகார்ஜுன் கார்கே

சி.பி.எம்., சி.பி.ஐ ஆகிய கட்சிகளால் திரிணாமுல் காங்கிரஸுடன் சேர வாய்ப்பே இல்லை. அங்கு, திரிணாமுல் காங்கிரஸும், பா.ஜ.க-வுக்கும் எப்படி நேரெதிராக களத்தில் இருக்கின்றனவோ, அதேபோலத்தான், சி.பி.எம் உள்ளிட்ட இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரஸும் நேரெதிராக மோதுகின்றன.

‘இந்த முரண்டுபாடுகளையும், தேர்தல் களச்சூழலையும் தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படிப் பார்க்கின்றன?’ என்று கேள்வியுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரான வீரபாண்டியனிடம் பேசினோம். “இந்தியாவின் உயர்ந்த விழுமியங்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன. நம்முடைய அரசியல் சாசனம், மதச்சார்பின்மை, நாடாளுமன்ற ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மம்தா பானர்ஜி

அதற்கு, பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும். ஒரு விரிவடைந்த ஜனநாயக மேடை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று எங்கள் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த அடிப்படையில், ‘இந்தியா’ கூட்டணி வெற்றிகரமான அமைந்தது. இதில், கேரளாவின் அரசியல் சூழல் வித்தியாசமானது. அங்கு, காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும்தான் போட்டியே. அங்கு, பா.ஜ.க மிக மிக சிறிய கட்சி. அப்படியிருக்கும்போது, அங்கு காங்கிரஸும் இடதுசாரிகளும் கூட்டணி சேர்ந்தால், யாரைத் தோற்கடிக்க? இதுதான் கேரளாவின் நிலை.

மேற்கு வங்கத்தைப் பொறுத்தளவில், பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் இடதுசாரிகளின் நிலை. மம்தா பானர்ஜியின் நிலையும் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்பதுதான். காங்கிரஸும், திரிணாமுல் காங்கிரஸும் இணைவதற்கு தொடர்ந்து முயற்சி நடக்கிறது. அவர்களுக்குள் கூட்டணி அமைந்து, பா.ஜ.க-வுக்கு எதிராக வெற்றிபெற்றால் நல்லது என்றுதான் நினைக்கிறோம்” என்கிறார் வீரபாண்டியன்.

ராகுல் காந்தி

மேற்கு வங்கம், கேரளாவின் தேர்தல் களம் குறித்து தமிழக காங்கிரஸாரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது. “கேரளாவில் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கும் காங்கிரஸுக்கும் தான் போட்டியே. இந்த இரு கட்சிகளின் ஒரு கட்சி தான் வெல்ல முடியும் என்பதே நிலைமை. இந்த இரு கட்சிகளின் சார்பில் யார் வென்றாலும் அது பாஜகவுக்கு எதிரான வெற்றி தான்.

ஆனால், மேற்கு வங்கத்தின் நிலைமை சற்று வேறானது. மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. ஆனாலும், அவர்களுடன் கூட்டணிக்கான வாய்ப்பு இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார். அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. எனவே, மேற்கு வங்கத்தில் கூட்டணிக்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது” என்று நம்பிக்கையுடன் தமிழக காங்கிரஸார் கூறுகிறார்கள்.

“மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் – திரிணாமுல் காங்கிரஸ் தனித்தனியே மோதி, அது பாஜகவுக்கு சாதகமாகிவிடும் வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டே காங்கிரஸ் இன்னும் வேட்பாளர் பட்டியலை அம்மாநிலத்துக்கு வெளியிடாமல் தொடர்ந்து மம்தாவுடன் பேசி வருகிறது. காலம் கடந்து முடிவெடுத்தால் அது மம்தாவுக்கு எதிராக தான் முடியும். காரணம் இறுதி நேரத்தில் காங்கிரஸுடன் கூட்டணி என அறிவித்தால், அது `மம்தா பாஜகவை கண்டு அஞ்சி கூட்டணி முடிவெடுத்தார்’ என்ற இமேஜை தான் கொடுக்கும். அந்த இமேஜை அவர் விரும்பமாட்டார். மேலும் கடைசி நேரத்தில் கூட்டணி அமைப்பது என்பது இரு கட்சிகளின் தொண்டர்களையும் களத்தில் இணையவிடாது செய்துவிடும். இதனால் மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி கடும் சவால்களை எதிர்க்கொள்ள உள்ளது என்பது மட்டும் நிஜம்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.