உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் நர்சிங் படித்துக்கொண்டிருந்த மாணவி, அண்மையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டிருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, விசாரணை நடத்தி வந்தது. அதில், நர்சிங் படித்து வந்த மாணவி, மகேந்திரன் என்பவரைக் காதலித்து வந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக காவல்துறை, மகேந்திரனை வெள்ளிக்கிழமை கைதுசெய்தது. அதைத் தொடர்ந்து அவரின் மாமாவையும் நேற்று கைதுசெய்திருக்கிறது. இது குறித்துப் பேசிய காவல்துறை தரப்பு, “வியாழக்கிழமை காலை 11 மணியளவில், நர்சிங் மாணவியின் விடுதிக்குச் சென்ற மகேந்திரன், அவரை அழைத்துக் கொண்டு காரில் சென்றிருக்கிறார்.
அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது, அதில் மகேந்திரன் கோபத்தில் அந்தப் பெண்ணை அறைந்திருக்கிறார். அந்தப் பெண்ணும் பதிலுக்கு அறைந்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த மகேந்திரன், காரின் டேஷ்போர்டில் வைத்திருந்த ஸ்க்ரூடிரைவால் மாணவியைச் சரமாரியாகக் குத்தியிருக்கிறார். சுமார் 25 – 30 நிமிடங்கள் வரை உயிருடன் இருந்த அந்தப் பெண், மதியம் 12 மணியளவில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துவிட்டார்.

அதன் பிறகு நள்ளிரவு வரை அந்தப் பெண்ணின் சடலத்துடன் காரில் சுற்றியிருக்கிறார் மகேந்திரன். இது தொடர்பாக மகேந்திரனைக் கைதுசெய்ய முயன்றபோது, அவர் தப்பிக்க முயன்றதால், காலில் சுட்டுப் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தக் கொலையில், மகேந்திரனுக்கு உதவிய அவரின் மாமாவைக் கைதுசெய்திருக்கிறோம். மேலும், மகேந்திரனின் சகோதரன் அரவிந்தைத் தேடி வருகிறோம். மூன்று பேர்மீதும் 302 (கொலை), 120 பி (சதி) உள்ளிட்ட பல்வேறு ஐபிசி பிரிவுகளின்கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.