திருப்பூர் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும், தற்போதைய திருப்பூர் எம்.பி.யுமான சுப்பராயன் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 75 வயதைக் கடந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படக் கூடாது. 2 முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்ற விதி உள்ள நிலையில், சுப்பராயனுக்காக கட்சி விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டு மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இளம் வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட சுப்பராயன், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் அக்கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். திருப்பூர் அணைக்காடு பகுதியைச் சேர்ந்த மில் தொழிலாளியும், கம்யூனிச ஆதரவாளருமான குப்புசாமி, சுப்பாத்தாள் தம்பதிக்கு 1947-இல் ஆகஸ்ட் 10-ஆம் பிறந்த கே.சுப்பராயன், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். 1969-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக இணைத்துக் கொண்டார்.

23-ஆம் வயதில் திருப்பூர் வட்டார இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர், பனியன் தொழிலாளர் சங்க செயலாளர் தொடங்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட கோவை மாவட்டச் செயலாளர், மாநிலத் துணைச் செயலாளர், அகில இந்திய தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார் சுப்பராயன்.
76 வயதாகும் கே.சுப்பராயன் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டு குழுத் தலைவராகவும், அகில இந்திய ஏஐடியூசி சங்கத்தின் துணைத் தலைவராகவும், பனியன் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 1985, 1996 ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு சுப்பராயன் வெற்றி பெற்றுள்ளார். 2004 கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னதாக, 1989-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டும், 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி என கட்சியிலும், தேர்தல் களத்திலும் நீண்ட அனுபவம் கொண்டவர் சுப்பராயன்.
75 வயதைக் கடந்துவிட்டதால் சுப்பராயனுக்கு இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி இருந்தது. அதேபோல், ஒருவருக்கே வாய்ப்பளிப்பதற்குப் பதில் இளைஞர்கள் அல்லது கட்சியின் மற்ற மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஒலிக்கத் தொடங்கியது. இந்நிலையில், திருப்பூர் தொகுதியில் சுப்பராயனே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசுகையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரையில் இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. அதேபோல், 75 வயதைக் கடந்தவர்கள் கட்சிப் பதவிகளில் தொடரக் கூடாது என்று விதி உள்ளது. இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட்டால் மூன்றாவது முறை வாய்ப்பளிக்க கூடாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவரே சுப்பராயன்தான்.
இந்த முறை திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும் தான் போட்டியிடப்போவதில்லை என செய்தியாளர்களிடம் சுப்பராயன் வெளிப்படையாகவே கூறிவந்தார். இதனால், கட்சித் தலைமையின் அடுத்த தேர்வாக மாநிலத் துணைச் செயலாளரும், மாநிலச் செயலாளர் முத்தரசனின் ஆதரவாளருமான பெருந்துறையைச் சேர்ந்த பெரியசாமி இருந்தார்.

இந்நிலையில், திருப்பூர் தொகுதியில் சுப்பராயனே மீண்டும் போட்டியிட வேண்டுமென திருப்பூர் மாவட்டக் குழு தீர்மானம் நிறைவேற்றி மாநிலத் தலைமைக்கு அனுப்பி இருந்தது. திருப்பூரைப் பொருத்தவரை சுப்பராயன் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், தொழிலதிபர்கள் தொடங்கி தொழிலாளர்கள் வரை தொகுதி முழுக்க நன்கு அறிமுகமானவர் என்பதால் அவரையே மீண்டும் நிறுத்தினால், எளிதாக வெற்றி பெற முடியும் என நினைக்கிறார்கள்.
கடந்த தேர்தலில் கொங்கு பகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்ற அதிமுக வலுவான வேட்பாளரை நிறுத்தினால், சுப்பராயன் அல்லாது, வேறொருவரை களமிறக்கும்பட்சத்தில் வெற்றி பெறுவது சிக்கலாகிவிடும் என கட்சியின் தேசியத் தலைமை நினைத்தது. இந்தப் பின்னணியில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு அண்மையில் கூடி ஆலோசனை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் விதிகள் அனைத்தும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மட்டும்தான் பொருந்துமா? மூத்த தலைவர்களுக்கு ஏற்றதுபோல் விதிகளை தளர்த்துவது எந்த விதத்தில் நியாயம் என கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு இடையே விவாதம் நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முத்தரசன் ஓர் அணியாகவும், சுப்பராயன் ஓர் அணியாகவும் செயல்படுகின்றனர் என்கிறார்கள் உள்விவரம் அறிந்த சிலர்.
ஒருவேளை சுப்பராயனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காவிட்டால், மாநிலச் செயலாளர் பதவிக்கு அவர் போட்டியிடக் கூடும் என முத்தரசன் அணி கருதுவதால் இதற்கு பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்கிறார்கள். இந்த பின்னணியில், மாநில நிர்வாக குழு அளித்த பரிந்துரையில், திருப்பூர் தொகுதியில் சுப்பராயனே போட்டியிட தேசியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுபோன்று பல நேரங்களில் விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது” என்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY