புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் குறித்த முழு விவரங்களும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பவர்கள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக கொடுத்து வந்த நிலையில், அது குறித்த முழு விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும் என்றும், அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி அளித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், அதில் போதுமான விவரங்கள் இல்லை என்பது தெரிய வந்ததை அடுத்து, முழுமையான தகவல்களை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் மற்றும் அதனை தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக்கொண்ட கட்சிகள் குறித்த முழு விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரங்களை வாங்கியவர்களின் பெயர்கள், அதனை் மதிப்பு, பத்திரங்களின் எண்கள், பத்திரங்களை பணமாக்கிய கட்சிகளின் பெயர்கள், அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கு எண்களின் கடைசி நான்கு இலக்கங்கள் மற்றும் மதிப்புகள் என அனைத்து விவரங்களும் தேர்தல் ஆணையம் வெளியிடுவதற்காக பகிரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, முழு வங்கிக் கணக்கு எண்களும், வாடிக்கையாளர் விவரங்களும் பகிரப்படவில்லை. அதேநேரத்தில், அரசியல் கட்சிகளை அடையாளம் காண அவை தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது. | வாசிக்க > மக்களவை மகா யுத்தம்: திருப்புமுனையாகுமா தேர்தல் பத்திர விவகாரம்?