டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ,அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். வரும் 28-ம் தேதி வரை அவரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. டெல்லி விவகாரம் இனி? – ஒரு விரைவுப் பார்வை.
கேஜ்ரிவால் எதிராக சாட்சி! – பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி டெல்லி திஹார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர், “அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது குழுவுக்கு எதிராக அப்ரூவராக மாறப் போகிறேன். அவர்களின் முறைகேடுகள் குறித்த தகவலை வெளிப்படுத்துவேன். அவர்களுக்கு எதிரான அனைத்து ஆவணங்களையும் வழங்கி உள்ளேன். உண்மை வென்றுள்ளது. திஹார் சிறைக்கு கேஜ்ரிவாலை வரவேற்கிறேன்” என்றார்.
ஏற்கெனவே, கடந்த மார்ச் 10-ம் தேதி, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற காவலரிடம் ஆஜராகியபோது, சுகேஷ் சந்திரசேகர், ”டெல்லி மதுவிலக்குக் கொள்கை வழக்கில் அடுத்ததாக கைது செய்யப்படுவது டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால்தான்” எனப் பேசியிருந்தார். கடந்த 21-ம் தேதி அவர் கைது செய்யப்பாட்டார் என்பதும் குறிப்பிடதக்கது. இந்த நிலையில், அரசு பொறுப்புகளைச் சிறையிலிருந்தே அரவிந்த் கேஜ்ரிவால் கவனித்து வருகிறார்.
யார் இந்த சுகேஷ் சந்திரசேகர்? – சுகேஷ் சந்திரசேகர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் உள்ளார். அவர் சிறையிலிருந்தபடியே டெல்லியை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.200 கோடியை மோசடியாக பெற்றதாக மீண்டும் கைதாகியுள்ளார்.
கடந்த காலங்களில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு நிதியளிக்க தன்னை வற்புறுத்தியதாகவும், சிறையில் தன்னை அச்சுறுத்தியதாகவும் சுகேஷ் குற்றம் சாட்டினார். இந்த நிலையில்தான் “அரவிந்த் கேஜ்ரிவால் ஊழலை அம்பலப்படுத்துவேன்” எனக் கூறினார்.
இந்தச் சூழலில், ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் செபாஸ்டியன் ஃபிஷர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். நீதித் துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான தரநிலைகள் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம்சாட்டப்பவர் நிரபராதி என்ற அனுமானமே சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் ஆட்சியின் மையக் கூறு. இது அவருக்குப் பொருந்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.
ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளரின் இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இதுபோன்ற கருத்துகளை எங்களது நீதித் துறையின் செயல்பாட்டில் தலையீடாகவும், எங்கள் நீதித் துறையின் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் பார்க்கிறோம். நாட்டில் உள்ள அனைத்து வழக்கிலும் சட்டம் தன் கடமையைச் செய்யும். இந்த வழக்கில் முன்வைக்கப்படும் ஒருசார்பு அனுமானங்கள் அவசியமற்றவை” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தன் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடித்தத்தில், “நான் சிறைக்கு செல்வதால், சமூக நலப் பணிகள் நின்றுவிடக் கூடாது என ஆம் ஆத்மி தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன். எனது கைது நடவடிக்கைக்காக பாஜகவினரை வெறுக்க வேண்டாம். அவர்கள் நமது சகோதர, சகோதரிகள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கடிதத்தை அரவிந்த் கேஜ்ரிவால் மனைவி சுனிதா வாசித்தார். எனவே, அவர் டெல்லியின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்பாரா என்னும் கேள்வி சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருவதால் தேசிய தலைநகரில் டெல்லி போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.