தமிழ்நாட்டில் தேர்தல் களம் அனலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிந்து பிரசாரத்தில் தலைவர்கள் அனைவரும் பிஸியாக இருக்கிறார்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ தனக்கு எதிராக தன்னுடைய பெயரிலேயே போட்டியிட வேட்புமனு கொடுத்தவர்களைச் சமாளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார். என்ன நடக்கிறது ராமநாதபுரத்தில் என்ற விசாரணையில் இறங்கினோம்.

ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார் என்றதுமே அனைவராலும் கவனிக்கப்படும் தொகுதியாக அது மாறிவிட்டது. ஆனால், அங்கே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக அவரை எதிர்த்து அவரது பெயரிலேயே ஐந்து பேர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் கூடுதல் சோகம். கட்சி, கொடி, சின்னம் என அனைத்தையும் இழந்தாலும் தென் மாவட்டங்களில் இப்போதும் பன்னீர்தான் அவர் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதியாகப் பார்க்கப்படுகிறார். இதை மதுரை மாவட்ட மாஜி ஒருவர் விரும்பவில்லையாம். எனவே, இந்தத் தேர்தலில் பன்னீரை டெபாசிட் இழக்கச் செய்து, அதன்மூலம் தென் மாவட்டங்களில் அவர்மீது கட்டமைக்கப்பட்டுள்ள சமூகரீதியிலான பிம்பத்தை உடைக்க வேண்டும்.
அப்போதுதான், தான் அந்தச் சமூகத்தின் தலைக்கட்டாக மாற முடியும் என நினைக்கிறாராம். இதனால்தான் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் உள்ளவர்களையெல்லாம் தேடித்தேடிப் பிடித்து வந்து வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தாராம் அந்த மாஜி. `என்னடா இது ஐயாவுக்கு வந்த சோதனை’ எனப் புலம்புகிறார்கள் பன்னீரின் ஆதரவாளர்கள்.

முதலில் ஓரிருவரை மட்டுமே நாமினேஷன் தாக்கல் செய்ய வைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி நாமினேஷன் செய்தவர்களுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து தேனி மற்றும் மதுரையில் இருந்த அதே பெயரைக் கொண்ட பலரும் ராமநாதபுரத்துக்குப் படையெடுத்திருக்கிறார்கள். வருபவர்களை ஏன் விட வேண்டும் என அந்த மாஜியும் எல்லோரையும் நாமினேஷன் தாக்கல் செய்ய வைத்திருக்கிறாராம். ஏற்கெனவே, உடனிருந்தவர்கள் மட்டுமல்லாது கூட்டணிக் கட்சியினரும் யாரும் தேர்தல் வேலைகளைப் பார்க்கவில்லை என்ற சோகத்தில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை இது மேலும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம்.