நடிகை அதிதி ராவ் ஹைதரியுடன் திருமணம் நிச்சயமானதை நடிகர் சித்தார்த் உறுதி செய்திருக்கிறார்.
‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிப் பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். கடந்த ஆண்டு சித்தார்த் தயாரித்து நடித்த ‘சித்தா’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதேபோல ‘காற்று வெளியிடை’, ‘செக்க சிவந்த வானம்’, ‘ஹே சினாமிகா’ போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் அதிதி ராவ். சித்தார்த் – அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து ‘மகா சமுத்திரம்’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தனர்.

அப்போதிருந்தே இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாகச் செல்வது, புகைப்படங்களைப் பதிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சித்தார்த்தும் – அதிதி ராவும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில் நேற்று திருமணம் செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில், “அவர் யெஸ் சொன்னார். ENGAGED!” எனப் பதிவிட்டு அதிதி ராவ் ஹைதரியுடன் திருமணம் நிச்சயமானதை நடிகர் சித்தார்த் உறுதிசெய்திருக்கிறார். திருமணம் முடிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், தற்போது ‘Engaged’ என்பதை மட்டும் சித்தார்த் உறுதி செய்திருக்கிறார்.
சித்தார்த் – அதிதி இருவருக்கும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.