திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சாமிநாதபுரம் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தின்கீழ் உணவு சமைத்து கொடுக்கும் பொறுப்பாளராக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் அவர் சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு வந்து புகார் ஒன்றை அளித்தார். அதில், “காலை 7 மணிக்கு வேலைக்கு சென்றேன். அப்போது மகுடீஸ்வரன் என்பவர் என்னிடம் `எத்தனை பேருக்கு சமைக்கிறாய்?’ எனக் கேட்டார். பள்ளியில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் 35 பேருக்கு சமைப்பதாகக் கூறினேன். பள்ளியில் உள்ள சமையல் அறையில் உள்ள அரிசி, பருப்புன் இருப்புகளை காட்டச் சொன்னார், காட்டினேன். அப்போது அவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் சாமிநாதபுரம் போலீஸார் மகுடீஸ்வரன் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
யார் இந்த மகுடீஸ்வரன்?
திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குள் வரும் புஷ்பத்தூர் ஊராட்சியின் தலைவராக பா.ஜ.க-வைச் சேர்ந்த செல்வராணி மகுடீஸ்வரன் உள்ளார். மகுடீஸ்வரன், பா.ஜ.க திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்தார். கடந்த ஆண்டு தி.மு.க அரசையும், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியையும் கண்டித்து, ஆயிரக்கணக்கானோரை சேர்த்து போராட்டம் நடத்தினார். இதையடுத்து தொப்பம்பட்டி ஒன்றியத்தில் செல்வாக்கான ஆளாக வலம்வந்தார். இந்த நிலையில்தான், பாலியல் புகாரில் சிக்கி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். “திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மகுடீஸ்வரன் சீட் கேட்டுள்ளார். கட்சித் தலைமை தரமறுத்ததால் மனஉளைச்சல் ஏற்பட்டு, தொடர்ச்சியாக குடித்திருக்கிறார். மேலும் அ.தி.மு.க-வில் இணையப் போவதாகவும், அதனால் கட்சியில் இருந்து விலக உள்ளதாகவும் கூறி வந்திருக்கிறார். இந்நிலையில்தான் மதுபோதையில் காலை உணவுத்திட்டத்தில் பணி செய்யும் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகிறோம்” என்றனர்.

இது குறித்து மாவட்டத் தலைவர் கனகராஜிடம் பேசினோம். “மகுடீஸ்வரன் உடல்நலக் குறைவு காரணமாக கட்சியில் செயல்பட முடியவில்லை எனக் கூறி, கடந்த 2-ம் தேதி கடிதம் கொடுத்திருந்தார். அதனை ஏற்றுத்தான் மாநிலத் தலைவர் ஒப்புதலுடன் கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவர்மீதான புகார் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை” என்றார்.