கோவை: “பிரதமர் வேட்பாளர் மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை என்பது தான் உண்மை” என, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன் பேசினார்.
கோவை மக்களவை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவுகோரி ராமநாதபுரம் மற்றும் சூலூர் பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு பணிகளின் போது எத்தகைய அழுத்தத்தை ஜெயலலிதா எதிர்கொண்டார் என்பதை நான் பார்த்துள்ளேன். எதிர்வரும் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மாபெரும் கூட்டணி அமைந்துள்ளது.
12 கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்துள்ளன. நாங்கள் தான் அம்மாவின் உண்மையான கட்சி. எம்ஜிஆர் வழங்கியுள்ள சின்னம் எங்களிடம் தான் உள்ளது என கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஏன் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.
நாங்கள் மோடியை பிரதமராக்க ஆதரவு கேட்கிறோம். ஸ்டாலின் கூட்டணிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்று கூற முடியுமா?. திமுக, அதிமுக கள்ள கூட்டணி அமைத்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி மீது கொடநாடு கொலை வழக்கில் மக்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே மறைமுகமாக திமுகவிற்கு உதவி செய்கிறார். தமிழகம் முழுவதும் திமுக-விற்கு எதிராக வெறுப்பு அலை காணப்படுகிறது. தேர்தல் பிரச்சார நிகழ்வுகளின்போது அவை எதிரொலிப்பதை காண முடிகிறது.
விவசாயிகள், தொழில்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் திமுக-விற்கு எதிராக உள்ளனர். பிரதமர் வேட்பாளர் மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை என்பது தான் உண்மை.
கோவை சிறப்பான வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து பல்வேறு திட்டங்களை உரிமையோடு பெற்று தர அண்ணாமலையை மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.