“பாஜக அரசை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு” – தேர்தல் அறிக்கையை வெளியிட்டு திருமாவளவன் பேச்சு

விழுப்புரம்: மக்களவைத் தேர்தலையொட்டி விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று காலை (மார்ச் 9) அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டபட்டினத்தில் வெளியிட்டார். பாஜக அரசை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு என்ற மையக் கருத்துடன் அந்த அறிக்கை அமைந்திருந்தது.

மேலும் அதில், “பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரு‌முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இண்டியா கூட்டணியின் முதல் புள்ளியை தொடங்கியவர் ஸ்டாலின். தமிழ்நாட்டுடன் தேர்தலை சுருக்காமல் இந்திய அளவில் தேர்தல் களத்தை விரிவாக்கினார்.” என்று கூறப்பட்டிருந்தது.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கிப் பேசிய திருமாவளவன், “பாஜகவுக்கு எதிரான திமுகவின் முயற்சிக்கு விசிக துணை நிற்கும். பாஜக அரசை வீழ்த்தவது தான் ஒன்றை இலக்கு‌. தேசிய மனித உழைப்பு நேரம் – மதிப்புக் கொள்கையை வலியுறுத்துவோம். வறுமைக் கோட்டுக்கான உச்சவரம்பினை உயர்த்துவோம்.

100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை 200 நாட்களுக்கு விரிவுபடுத்துவோம். ஜிஎஸ்டி-யை ஒழிக்க குரல் கொடுப்போம். மத்திய அரசில் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போன்ற அனைவருக்கான நலனை முன்னிறுத்தும் திட்டங்களே விசிக‌ தேர்தல் அறிக்கையின் முக்கியவத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “நான் முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பிற்படுத்தப்பட்டோரின் உச்ச வரம்பினை உயர்த்த குரல்கொடுத்து அதனை மாற்ற வைத்தேன். அகில இந்திய‌‌ மருத்துவ இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய குரல் கொடுத்தேன்” என்று நினைவு கூர்ந்தார்.

இதுதவிர, விசிக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

  • ராமர் கோவில் கட்டியதில் நடந்த ஊழல் முறைகேடு தொடர்பாக விசாரணை.
  • ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும், ஆளுநரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்க கூடாது.
  • இந்தியா முழுவதும் தமிழ்ச் செம்மொழி வாரம் கொண்டாடப்பட வேண்டும்.
  • 65 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் திட்டம்.
  • தலித் மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கித் திட்டம்.
  • ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை ரத்து.
  • தமிழகத்துக்கென தனிக் கொடி உருவாக்கம்.
  • இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை உருவாக்குதல்.
  • ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம்.

இத்துடன் இன்னும் பல அம்சங்களும் விசிக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.