திண்டுக்கல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரக்தியின் விளிம்பில் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கள் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நெல்லை முபாரக்கை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதில் பேசிய அவர், “கடந்த 15 நாட்களாக முதல்வர் ஸ்டாலின் எல்லா இடங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். செல்லும் இடங்களில் என்னை பற்றி மட்டுமே பேசுகிறாரே தவிர, தாங்கள் எல்லாம் என்ன செய்தோம் என்று சொல்ல மறுக்கிறார். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அவருடைய மகன் உதயநிதி, எடப்பாடிக்குச் சென்று நான் பிரதமருடன் சிரித்துப் பேசும் புகைப்படத்தை காட்டுகிறார். சிரிப்பது தவறா?
அவர் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். அதனால்தான் இப்படியெல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறார். ஸ்டாலினின் நடிப்புக்கு முன்னால் சிவாஜியே தோற்றுவிடுவார். இப்படியெல்லாம் நடித்து மக்களை ஏமாற்றி மூன்றாண்டு காலம் தமிழகத்தை குட்டிச் சுவராக்கியதுதான் மிச்சம்.
வெளியில் வீரவசனம். ஆனால் மோடியை நேரில் பார்த்தால் சரணாகதி. இதுதான் திமுகவின் நிலைப்பாடு. எனவே ஸ்டாலின் எப்படியான நாடகத்தை அரங்கேற்றினாலும் அவருக்கு வெற்றிவாய்ப்பு கிடையாது. அதிமுக கூட்டணி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
ஸ்டாலின் எத்தனை பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. தேர்தல் பத்திரம் குறித்து பேச ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? திமுகவுக்கு ரூ.650 கோடி தேர்தல் நிதி வந்திருக்கிறது. பாஜகவுக்கு ரூ.6000 கோடி வந்துள்ளது. ஆனால் அவர்களுக்கு அவ்வளவு வந்துள்ளது, நமக்கு அவ்வளவு தொகை வரவில்லையே என்பதால்தான் ஸ்டாலின் அதுகுறித்து இவ்வளவு பேசுகிறார்” என்று பழனிசாமி தெரிவித்தார்.