ரம்ஜான் பண்டிகையான இன்று, ஹரியானாவில் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளாகி 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், பொது விடுமுறையன்று பள்ளி திறக்கப்பட்டது ஏன் என மாநில கல்வியமைச்சர், உட்பட பாதிக்கப்பட்ட குடும்பங்கள், உள்ளூர்வாசிகள் எனப் பலரும் கேள்வியெழுப்பிவருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி மகேந்திரகர் பகுதியில் GL Public School என்ற பெயரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் பேருந்து, இன்று காலை மாணவர்களை அவரவர் வீட்டில் இறக்கிவிடப் புறப்பட்டது.

அப்போது, எதிர்பாராத விதமாகப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், 6 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அதோடு, பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இது பற்றி செய்தியறிந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் மாணவர்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்தனர். இன்னொருபக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், 2018-லேயே பேருந்தின் தகுதிச் சான்றிதழ் காலாவதியானது தெரியவந்தது. இதனால், உரிய ஆவணங்கள் இன்றி ஓடும் வாகனங்களைக் கட்டுப்படுத்த தவறியதற்காக மாநில சாலை போக்குவரத்து அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
#WATCH | Five students dead, 15 injured after a private school bus meets with an accident in Mahendragarh’s Kanina, in Haryana. pic.twitter.com/jhRvJo0hXg
— ANI (@ANI) April 11, 2024
இந்த நிலையில், பொது விடுமுறையன்று பள்ளி திறக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வியெழுப்பிய மாநில கல்வியமைச்சர் சீமா த்ரிகா, “பள்ளியை இன்று திறந்திருக்கக் கூடாது. திறந்ததற்கான காரணம் கேட்டு, பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். இது போன்ற சம்பவங்களில், பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்தியிருப்பது தெரியவந்தால், பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். அதோடு ஓட்டுநர், பள்ளியின் முதல்வர், பேருந்து உரிமையாளர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்” என்று கூறினார்.