விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக அவருடைய தம்பியும், நடிகருமான சண்முகபாண்டியன் விருதுநகர் தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டை நகர் பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அதன்படி அருப்புக்கோட்டை பாவடிதோப்பு, காந்தி மைதானம், வேலாயுதபுரம், சிவன்கோவில், சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், நெசவாளர் காலனி, ராமசாமிபுரம், எம்.எஸ்.கார்னர், வெள்ளக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சண்முக பாண்டியனுக்கு கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசுகையில், “இதுதான் என்னுடைய முதல் தேர்தல் பிரசாரம்.


என்னுடைய அண்ணனுக்காக நான் வாக்குக்கேட்டு வந்திருக்கிறேன். என்னுடைய அப்பா கோவிலில் இருக்கும்போது பலரும் என்னிடம் வந்து, ‘ஒரு முறையாவது உன் அப்பாவை வெற்றிபெற வைத்திருக்கலாம்’ எனச் சொல்லி வருத்தப்பட்டார்கள். என்னுடைய அப்பாவை வெற்றிபெற வைக்கவில்லையே என யாரும் வருத்தப்பட வேண்டாம். அச்சு அசலாக என்னுடைய அப்பா சாயலில் இருக்கும் எனது அண்ணன் விஜயபிரபாகரனை வெற்றிபெற வைத்தாலே போதும். என் அப்பா ஆத்மா சாந்தி அடையும். இந்த மக்களுக்கு என்ன பிரச்னை உள்ளதோ அதை என்னுடைய அண்ணன் இந்த தொகுதியில் மக்களோடு மக்களாக தங்கியிருந்து தீர்த்துவைப்பார். உங்கள் வீட்டு பிள்ளையாக, அண்ணனாக, மகனாக விஜய பிரபாகரன் தேர்தலில் நிற்கிறார். அவருக்கு நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிக்கவேண்டும்” என்றார்.